Pages

Sep 6, 2013

"உயிரிழந்த புலி உறுப்பினர்களுக்கு அஞ்சலி," திரிபுபடுத்தப்பட்ட செய்தி என்கிறது ஐ.நா ஆணையாளர் அலுவலகம்

"உயிரிழந்த புலி உறுப்பினர்களுக்கு அஞ்சலி," திரிபுபடுத்தப்பட்ட செய்தி என்கிறது ஐ.நா ஆணையாளர் அலுவலகம்

நவனீதம்பிள்ளை அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது, உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்தார் என்று வெளியான செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இலங்கை விஜயத்தின்போது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்துவதற்கு திட்டமிட்டிருந்தார் என இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததாக BBC உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அண்மையில் இலண்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் குறிப்பிட்டிருந்ததாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், இந்த செய்திகளை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகப் பேச்சாளர் ரூபர்ட் கோல்வில் நிராகரித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பும் நாடுகளுக்கான விஜயங்களின்போது, யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து தரப்பினருக்கும் மனித உரிமைகள் ஆணையாளர் அஞ்சலி செலுத்துவது வழக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமையவே, நவனீதம்பிள்ளை இலங்கையிலும் அஞ்சலி செலுத்த விரும்பியதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக பேச்சாளரை மேற்கோள்காட்டி BBC வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அஞ்சலி நிகழ்வு குறித்து பரிசீலிக்கப்பட்டமையை அறிந்த இலங்கை அரசாங்கம், அது தொடர்பில் மாறுபட்ட கருத்தொன்றை முன்வைத்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகப் பேச்சாளர் ரூபர்ட் கோல்வில் கூறியுள்ளார்.

இதனைக் கவனத்திற்கொண்ட ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம், இந்த செயற்பாடு தவறாக புரிந்துகொள்ளப்படலாம் என்பதன் அடிப்படையில் அதனை கைவிட்டதாகவும் BBC குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், அத்தகைய ஒரு சம்பவம் இடம்பெறாத நிலையில், அது தொடர்பில் அதிகளவான சலசலப்பை ஏற்படுத்துவது ஆச்சரியம் அளிப்பதாகவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment