Pages

Apr 21, 2013

தற்போதைய சமூக தலைமைத்துவங்கள் சுத்தமானதாக இல்லை: அமைச்சர் பஷீர்

தற்போதைய சமூகத் தலைமைத்துவங்கள் சுத்தமானதாக இல்லை என உற்பத்தித் திறன் விருத்தி அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் காரியாலம் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் நேற்று சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உற்பத்தித் திறன்விருத்தி அமைச்சர் பஷீர் சேகுதாவூத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இங்கு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பஷீர் சேகுதாவூத்,

"ஏறாவூர் நகரம் துரிதமாக அபிவிருத்தி கண்டு வருகின்றது. அரசியல் நோக்கங்களுக்காகச் செய்யப்படுகின்ற அபிவிருத்தி மற்றும் மக்களுக்காக  செய்யப்படுகின்ற அபிவிருத்தி என இரு வகைப்பட்ட அபிவிருத்திகள் இங்கு உண்டு. அடுத்த தேர்தலை மையப்படுத்திய பிரகாசிக்கும் அரசியல் என்றில்லாமல் மக்களுக்குத் தேவையானவற்றைத் தேடிச் செய்கின்ற அபிவிருத்தி என்பது எல்லோருக்கும் கடமையாகவுள்ளது.

அதற்கான சரியான ஒரு அரசியல் தலைமைத்துவம் தேவை என்ற அடிப்படையிலேயேதான் இந்த அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் காரியாலயம் அமைக்கப்படுகின்றது. உண்மையான அர்ப்பணிப்புடன் எதிர்கால சந்ததிக்கு பரிசளிக்கக் கூடிய ஒரு அபிவிருத்திடைந்த ஊரை நாம் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கான முன் முயற்சிதான் இந்த அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகம்.

இந்தக் காரியாலத்தைப் பயன்படுத்தி இந்த ஊருக்குத் தேவையான சரியான அபிவிருத்தித் திட்டங்களை வகுக்க வேண்டும். சரியான திட்டமிடல் ஒருங்கிணைப்பு, வழிகாட்டல் இருந்தால்தான் அபிவிருத்தி வெற்றியளிக்கும். மக்கள் நட்புறவுடனான அபிவிருத்தித் திட்டங்களே வெற்றியளிக்கும்.

பிரதேச செயலகத்தின் ஒரு கூறாகத்தான் இந்த ஒருங்கிணைப்புக் காரியாலயம் இருக்கும். இது பிரதேச செயலக நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்குகின்ற ஒரு காரியாலயமல்ல என்பதை நான் அரசியல் வாதிகளுக்கு தெளிவாகச் சொல்லிவைக்க விரும்புகின்றேன்.

இந்த அரசாங்கத்திலே அபிவிருத்தி என்பது துரித கதியிலே இடம்பெற்று வருவதை நாடும் வீடும் நன்கு அறியும். விஷேடமாக வடக்கு கிழக்கிலே அபிவிருத்திகள் கிட்டத்தட்ட முடிவுறும் தறுவாயில் இருக்கின்றது. நாட்டில் இப்போது அரசியல் ஸ்திரத்தன்மை இருக்கின்றது. நமது பாரம்பரிய அரசியல் முறைமை மிகவும் வெட்கக்கேடானது. அது அதிகாரத்தை மட்டும் நம்பியிருந்த ஒன்று.

மற்றவர்களின் முதுகுகளிலே அமர்ந்திருந்து பயணம் செய்கின்ற சுய நலம் கொண்டதுதான் அது. எல்லோருக்கும் அதிகாரம் தேவைப்படுகின்றது. தனக்கு வாய்ப்பாக இருப்பதை மட்டும் சிந்திக்கின்ற ஒரு சுய நலப்போக்கு எல்லா மட்டத்திலும் மாற வேண்டும். ஊருக்கு நல்லது செய்ய வேண்டும்.

மின் கட்டண அதிகரிப்பை ஊதிப் பெருப்பித்து அதனைக் கொண்டு அடுத்த தேர்தலில் மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்று ரணில் கனவு கண்டு கொண்டிருக்கின்றார். இலங்கையில் வேலைவாய்ப்பற்றோர் வீதம் 4 ஆகக் குறைந்திருக்கின்றது. அமெரிக்கா 20 வீதத்தை நிறுத்தியிருப்பதன் காரணம் இலங்கையோடு கோபத்திற்காக அல்ல.

தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளுக்குச் சரியான நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். அதற்காகத்தான் அமெரிக்க உதவி நிறுத்தப்பட்டதென்று சிலர் கூறுகின்றார்கள். புதிதாக உருவாக்கப்படும் இலங்கையின் ஒரு பங்கை தமிழர்களும் முஸ்லிம்களும் பறித்தெடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் நமது பங்கையும் சிங்களவர்கள் பறித்தெடுத்துக் கொள்வார்கள். நாம் கைகட்டிப் பார்த்துக் கொண்டு நின்றால் யாரும் நமக்குக் கொண்டு வந்து தரமாட்டார்கள்.

சிங்கள அதிகாரிகள் வடக்கு கிழக்கிலே சிங்கள வாழ்க்கையை வாழ வேண்டியதில்லை. இந்த நிலைமை எங்களில் தங்கியிருக்கின்றது. தமிழர்களும் முஸ்லிம்களும் நெறிப்படுத்தப்பட்ட சமூகமாக மீள் எழ முடியுமாக இருந்தால்தான் சிறுபான்மையினருக்கு அபிவிருத்தியில் வெற்றி கிட்டும்.

தமிழர்களுடைய போராட்டத்தில்  நானும் ஒரு பங்குதாரி அதனால் பொது மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நான் பேசியிருக்கின்றேன். தமிழர் போராட்டம் தன்னையே கொடையாகக் கொடுக்கின்ற அளவுக்கு யுத்தமாக பரிணமித்து இறுதிக் கட்டத்திற்குச் சென்றது.
நான் ஒரு போதும் அதிகார கவர்ச்சிக் குதிரை ஓட்ட அரசியல் செய்ய மாட்டேன். ஒட்டகத்தைப் போன்று சமூகத்தின் சுமைகளைத் தாங்கிச் செல்ல வேண்டும். பிடரி மயிர் சிலிர்த்தெழ முன்னங்காலும் பின்னங்காலும் உந்தித் தள்ளி சாகச ஓட்டம் ஓட என்னால் முடியாது. எனது பயணம் தாமதம்தான் ஆனால் நிச்சயமானது. ஆத்திரம் அவசரம் எல்லாம் எனக்கில்லை" என்றார்.

இந்த அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் காரியாலம் மூன்று பட்டதாரிப் பயிலுநர்கள் அபிவிருத்தித்திட்ட ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.TM

No comments:

Post a Comment