Pages

Mar 26, 2013


ஐபிஎல் கிரிக்கெட்:சென்னைப் 

போட்டியில் இலங்கை வீரர்கள் இல்லை.

சென்னையில் நடைபெறவுள்ள இந்தியப் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், இலங்கை வீரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என அப்போட்டிகளை நடத்தும் நிர்வாக அமைப்பு முடிவெடுத்துள்ளனர்.
இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு போட்டிகளை நடத்தும் ஐபிஎல்அமைப்பின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாடும் போட்டிகளில் பங்குபெற மாட்டார்கள் எனும் முடிவு, ஐபிஎல்லிலுள்ள ஒன்பது உரிமையாளர்களுக்கும் அறிவிக்கப்படும் எனவும் ஐபிஎல்லின் செய்திக் குறிபபு கூறுகிறது.இன்று(26.3.13) அன்று மதியம் ஐபிஎல் அமைப்பின் நிர்வாகக் குழு கூடி, தமிழக முதல்வர் இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள், விளையாட்டு அரங்கத்தில் பணியாற்றுபவர்கள் போன்ற அனைவரது பாதுகாப்பும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு மிகவும் முக்கியமானது என்றும் ஐபிஎல் அமைப்பின் தலைவர் ராஜீவ் சுக்லா பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் அந்த அறிக்கை கூறுகிறது.

ஜெயலலிதா எதிர்ப்பு



முன்னதாக, இந்தியன் பிரிமியர் லீக்(ஐ பி எல்) கிரிக்கெட் போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எவரும் கலந்து கொண்டால் அப்போட்டிகள் சென்னையில் நடைபெறுவதற்கு அனுமதி அளிக்கப்படாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்குடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா(பழைய படம்)
ஐபிஎல் போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள், அதிகாரிகள் என அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் கலந்து கொண்டால், தமிழகத்தில் அப்போட்டிகள் நடைபெறுவதற்கு அனுமதி அளிக்க முடியாது என தமிழக முதல்வர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெறும் ஐபில் போட்டிகளில் இலங்கை வீரர்கள் எவரும் கலந்துகொள்ளக்கூடாது என வலியுறுத்தி சில மாணவர்குழுக்கள் கையெழுத்தியக்கம் தொடங்கியிருக்கும் நிலையிலேயே அவர் இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


"இலங்கைக்கு எதிரான உணர்வுகள்"

இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில், அந்நாட்டுக்கு எதிரான உணர்வுகள் தமது மாநிலத்தில் கொந்தளிக்கின்றன என தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள ஜெயலலிதா, இந்நிலையில் சென்னையில் போட்டிகள் நடைபெற்றால் அவை போராட்டங்களுக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலும் தொடர்கிறது எனவும் கூறியுள்ள தமிழக முதலவர், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வது தமிழகத்தில் நிலைமையை மேலும் மோசமாக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே இந்திய மத்திய அரசே இலங்கை வீரர்கள், நடுவர்கள் மற்றும் அதிகாரிகள் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறுவதைத் தவிர்க்கவேண்டுமென இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அறிவுறுத்தவேண்டும் என மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
எவ்வகையிலும் இலங்கையர் பங்கு பெறும் ஐபிஎல் போட்டிகள் தமிழகத்தில் அனுமதிக்கப்படாது என்கிறார் முதல்வர்.
அண்மையில்தான் இலங்கை விளையாட்டு வீரர்கள் பங்கு பெற்றால் ஆசிய தடகளப் போட்டிகள் சென்னையில் அனுமதிக்கப்படாது என முதல்வர் அறிவித்திருந்தார் என்பதும், அதற்கு முன்னர் இலங்கையைச் சேர்ந்த கால்பந்து குழுவினர் கூட திரும்பி அனுப்பப்பட்டனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஐ பி எல் போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 26 ஆம் தேதி வரை இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறவுள்ளன.

No comments:

Post a Comment