பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பாயிஸின் திறந்த மடல்


இந்த பகிரங்க மடலை முகம்மது பாயிஸ் எமது இணையதளத்தற்கு பிரசுரிக்குமாறு அனுப்பியிருந்தார்.
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஒரு திறந்த மடல்!
காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்துக்கு ஈரானில் இருந்து மாபிள்கள் இறக்குமதி!” என்றதொரு செய்தியை இணையதளத்தில் பார்வையிட்டதும் என்னால் அழுவதா சிரிப்பதா என புரியவில்லை!
இலங்கை முஸ்லிம் சமூகம் இன்று தலை போகும் பிரச்சினையில் இருக்க நீங்கள் அவர்களுக்கு தலைப்பாகை அணிவிக்கும் முயற்சியில் இருக்கிறீர்கள் என்பதை நினைக்கையில் உங்களை நினைத்து சிரிப்பதையும் முஸ்லிம் சமூகத்தின் தலைவிதியை எண்ணி அழுவதையும் தவிர வேறு வழியில்லை!
புகழ்பெற்ற ”காத்தான்குடி குட்வின் சந்தியை” குர்ஆன் சந்தியாக மாற்றி மட்டும் அல்லாஹ்வின் திருப்தியை ஒருபோதும் அடைந்துவிட முடியாது. குர்ஆனை விளங்கி ஓதி அதன்படி நடந்தால் மட்டுமே இறைவனின் திருப்தியை அடைந்துகொள்ள முடியும். அன்றி வீதிகளின் முச்சந்திகளுக்கு குர்ஆனின் திருப்பெயரை வைத்து அத்தனை இலகுவாக சுவனம் சென்றுவிட முடியாது.
காத்தான்குடி உள்ளூர் வீதிகள் மிக மோசமான நிலையில் இருக்க நீங்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஜப்பான் நாட்டு உதவுயுடன் அமைத்துத்தந்த பிரதான வீதியைமட்டும் அலங்கரித்து ஈச்சை மரங்களை நட்டு அவற்றுக்கு மின் விளக்கேற்றி பஸ்மலா சதுக்கம், குர்ஆன் சதுக்கம், அல்லாஹ் சதுக்கம் என பெயரிட்டு எதை சாதிக்கப்போகிறீர்கள் எனப் புரியவில்லை?
இந்த சமூகத்துக்கு நீங்கள் செய்ய வேண்டிய எத்தனையோ கடமைகள் இருக்க ஈரான் நாட்டில் இருந்து சலவைக் கற்களை இறக்குமதி செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறீர்கள். அதற்கு பிரதியமைச்சர் அவசியமில்லை.புறக்கோட்டையில் உள்ள ஒரு வர்த்தக தரகர் போதும்.
முஸ்லிம் சமூகம் எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் உங்களை பாராளுமன்றம் அனுப்பினால் அங்கு பாதணிகளை கழட்டி ஓரத்தில் வைத்துவிட்டு கால்மேல் கால் போட்டு சபாநாயகர் உங்களை மூன்று முறை விழித்தும் அறியாதவராக உறங்குகிரீர்கள். பாராளுமன்ற பணியாளர் வந்துதான் உங்களை தட்டி எழுப்ப வேண்டி இருக்கிறது. அந்நிய சமூகத்தை சேர்ந்த சகோதரர்கள் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காக பாராளுமன்றம் அதிரும்படி பேசிக்கொண்டிருக்கிறார்கள் நீங்கள் அஸ்வர் எம்.பி அவர்களுடன் சேர்ந்துகொண்டு அவர்களின் பேச்சுக்கு இடையூறு செய்து கொண்டு இருக்கிறீர்கள்.
நாட்டில் ஏற்பட்டுள்ள ஹலால் பிரச்சினை சம்பந்தமாக இதுவரை ஏதாவது உங்களால் கருத்துக் கூற முடிந்திருக்கிறதா? பாராளுமன்ற சிற்றுண்டிச் சாலையில் ஹலால் உணவுப் பிரச்சினை வந்தபோது வாய் திறந்த உங்களைப் போன்ற ஆளும் கட்சி உறுப்பினர்களால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் ஹலால் உரிமைக்காய் ஏன் மௌனித்துப்போனீர்கள் ?
முஸ்லிம்களின் உரிமைக்காய் இன்று தனது உயிரையும் பொருட்படுத்தாது குரல்கொடுக்க முன்வந்த அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உலமாக்கள் முன் நீங்கள் எம்மாத்திரம்?
இனியும் கண்மூடி வாய் பொத்தி இருக்காமல் அல்லாஹ்வுக்காக முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காக தலைநிமிர்ந்து பேசக்கூடிய ஒரு தலைவனாக மாற முயற்சியுங்கள். உங்கள் பின்னால் அணி திரள ஆயிரமாயிரம் இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். வெறும் அலங்காரங்களையும் பெறுமதியற்ற அபிவிருத்திகளையும் காட்டி முஸ்லிம் மக்களை குறிப்பாக காத்தான்குடி மக்களை ஏமாற்ற வேண்டாம்.
மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் சென்ற 25ம் திகதி நடந்த ஹர்த்தாலை தடுத்து நிறுத்த இராணுவம், காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனம், நகர சபை என பலரின் உதவியுடன் நீங்கள் முயன்றும் எமது காத்தான்குடி வர்த்தக சமூகம் தனது உறுதியான ஒற்றுமையை வெளிக்காட்டி உங்கள் கோரிக்கைகளை நிராகரித்திருந்தார்கள். நடந்து முடிந்த வெற்றிகரமான ஹர்த்தால் உங்களுக்கும் உங்களைப் போல சமூகத்தை அடைமானம் வைத்து அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் தலைவர்களுக்கும் பல செய்திகளை சொல்லியிருக்கும் என நினைக்கிறேன்.
முஹம்மத் பாயிஸ்
சவூதி அரேபியா
No comments:
Post a Comment