பாடசாலையில் வர்ணம் பூசுவதற்காக தேங்காய் திருடிய மாணவி கைது
களுத்துறை மாவட்டத்தில் ஹொரணை அரமனகொல்லவை சேர்ந்த 13 வயதான பாடசாலைச் சிறுமியொருவர் அயலவர் ஒருவரின் வீட்டுத் தோட்டத்தில் 320 ரூபா பெறுமதியான 8 தேங்காய்களைப் பொறுக்கிய குற்றத்திற்காக ஹொரணை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.பாடசாலைக்கு வர்ணம் பூசக் கேட்ட 800 ரூபா பணத்தைச் செலுத்த தமது பெற்றோரிடம் வசதியில்லாத காரணத்தினால் தேங்காய்களைப் பொறுக்கியதாக இச்சிறுமி சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பதில் நீதிவான் மானெல் குணதிலக்க சிறுமியை 50,000 ரூபா பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.
பொலிஸார் இப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து வைக்க முற்பட்ட போதிலும் காணி உரிமையாளர் இதற்கு உடன்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இணக்க சபை மூலம் தீர்த்து வைக்கக் கூடிய வாய்ப்பிருந்தபோதிலும் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டமை குறித்து பிரதேச வாசிகள் கவலை தெரிவித்தனர்.
இப்பிரச்சினை தொடர்பாக அமைச்சரவையில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து ஜனாதிபதி மிகவும் கவலையடைந்து இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கும் உத்தரவிட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் இதுபோன்ற தொரு சம்பவம் இடம்பெற இடமளிக்கக் கூடாது எனக் கூறியுள்ளார்.
இதேவேளை பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் வசூல் செய்யக் கூடாது என கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளபோதிலும் நாட்டில் பெரும்பாலான பாடசாலைகளில் இதனைப் பொருட்படுத்தாது மாணவர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படுகிறது.
குறிப்பாக களுத்துறை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தமிழ்ப் பாடசாலைகளில் பாடசாலைக் கட்டிடங்களுக்கு வர்ணம் பூச, வேலி அடைக்க, பூச்சட்டி வாங்குவதற்கென பல்வேறு காரணங்களைக்காட்டி பெற்றோருக்கு பெருஞ்சுமையை ஏற்படுத்தி பணம் வசூல் செய்யப்படுவதாகவும் வருடாவருடம் தரம் 1 இல் புதிய மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும்போது பாடசாலைத் தேவைகளுக்கெனக் கூறி பெற்றோரிடம் இருந்து பெருந்தொகையான பணம் வசூல் செய்யப்படுவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
@ ZAFNY AHAMED (THI)
No comments:
Post a Comment