தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி
உரை!
தாய் நாட்டை விட சிறந்த நாடு வேறு எங்கும் இருக்க முடியாது. உங்கள் நாட்டை ஒருபோதும் மறக்க வேண்டாம். தாய்நாடே சிறந்ததென தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொறியியல் பீடத்தை நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடம் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இஸ்லாமிய கற்கை அரபு மொழி பீடத்திற்கான கட்டடம், பல்கலை மாணவர்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவுக்கான கட்டடம் ஆகியனவும் ஜனாதிபதியினால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
322 மில்லியன் செலவில் இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது. குவைத் நாட்டின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டடத்தின் திறப்பு விழாவில் அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்க, ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம். அதாஉல்லா, சிரேஷ்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி;- இந்த உலகில் களவாட முடியாதது அறிவு மாத்திரமே. இது பெரியதொரு செல்வம். பல்கலைக்கழக மாணவர்கள் சிறப்பாகக் கற்று சர்வதேச ரீதியில் தொழில்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம்.
அவ்வாறு சர்வதேச ரீதியில் தொழில்புரியச் சென்றாலும் நம் தாய் நாட்டை மறக்கக்கூடாது. சாந்தி, சகவாழ்வு சமாதானம் இவற்றையே இஸ்லாமிய மதம் வலியுறுத்துகிறது. பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் இனவாதம், மதவாதம், தீவிரவாதம் இருக்கக்கூடாது.
நீங்களே நாட்டைப் பாதுகாக்க வேண்டும். நீங்களே இந்த நாட்டின் எதிர்கால புத்திஜீவிகள். இன, மதங்களுக்கு அப்பால் ஐக்கியத்தை இங்கு காண முடிகின்றது. தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் இங்கு ஒற்றுமையாகக் கல்வி பயில்கின்றனர். இது ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு முன்மாதிரியாகும்.
கடந்த 5 வருடத்தில் அரசாங்கத்தின் மூலமும், குவைத்தின் கடன் உதவி மூலமும் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். இன்று பொறியியல் பீடமும் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கடனுதவியை வழங்கிய குவைத் அரசாங்கத்துக்கு இலங்கை அரசின் சார்பில் நன்றி கூறிக்கொள்கிறேன்.
@ ZAFNY AHAMED
No comments:
Post a Comment