BA (Hons)(Sociology)
SEUSL
பொதுவாக உலகச் சமூகங்கள் தமக்கென தனியான பண்பாட்டு, கலாசார அம்சங்களுடன் இயங்கினாலும், அச்சமூகங்களில் 'மாற்றம்'; என்பது தவிர்க்க முடியாத வகையில் உள்வாங்கப்படுகின்றது. சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் ஏற்பட்டுவரும் புதிய சிந்தனைகள் சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட வழியமைக்கின்றன. உலகமயமாதல், நவீனமயமாதல் ), தொழில்மயமாதல், மேலைத்தேயமயமாதல், பண்பாட்டுபேறு ) என்பவை மூலமாக சமூகங்கள் அபிவிருத்தி, வளர்ச்சி என்பவைகளைப் பெற்றள்ளது. இருப்பினும், சமூகங்கள் உள்ளார்ந்த ரீதியில் ஆரோக்கியமற்ற தன்மைகளையும் பெற்றுள்ளது.
சமூக மாற்றம் என்;பது சமூக அமைப்பிலே ஏற்படுகின்ற மாற்றம் என சுருக்கமாகக் குறிப்பிடலாம். அதாவது சமூகத் தோற்றப்பாடுகளில், சமூக உறவுகளில் பண்பாடுகளில், சமூகக் கட்டமைப்பு என்பவைகளில் ஏற்படுகின்ற மாற்றமாகும்.(Nicholas & Stephen all, 1988, P- 382) சமூக வாழ்க்கை என்பது எப்போதும் ஒரே தன்மையானதாகவோ: மாற்றத்திற்கான முயற்சியற்றதாகவோ இருப்பதில்லை. சமூக வாழ்கை வட்டத்தினுள் எப்போதும் இடைவிடாத அசைவியக்கம் இருந்து கொண்டே இருக்கும். இவ்வசைவியக்கம் குறிப்பிட்ட சமூகத்தின் பாரம்பரியங்களை, நியமங்கள், நிதர்சனங்கள், விழுமியங்கள் என்பவற்றிற்கு ஏற்ப இருக்கும் சமூக நிலையிலும் பார்க்க மேல் நோக்கிய நகர்வை அல்லது கீழ்நோக்கிய நகர்வை சமூகத்திலே கொண்டு செல்லும். பொதுவாக முற்போக்குத் தன்மையான சமூக மாற்றம் சமூக நிலையினை சமூக வளர்ச்சிப்படியின் ஒரு நிலையிலிருந்து இன்னொரு படிநிலைக்கு இருப்பதிலும் பார்க்க உயர்ந்தது என்று கருதத்தக்க நிலைக்கு இட்டுச்செல்லும்.
சமூக மாற்றம் என்பது சமூகத்தின் பண்பாட்டின் எல்லாத் தளங்களிலும் சம அளவு நிகழ்வதில்லை. வலுவான பண்பாட்டு ஒன்றியம் கொண்ட சமூகப்;பிரிவில் சில தளங்களில் மாற்றம் விரைந்தும், குறைந்தும் ஏற்படலாம். குறைந்த பண்பாட்டு ஒன்றியம் கொண்ட சமூகங்களிலே மாற்றங்கள் விரைந்தே நிகழ்கின்றன. படிப்படியான சமூக மாற்றம் சமூகத்திற்குள் எப்போது; நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. திடிரென ஏற்படும் மாற்றங்களைக் காண்பது அரிது. இருப்பினும் புரட்சி போன்ற சமூக முரண்பாட்டின் விளைவாக திடிர் சமூக மாற்றம் உருவாகும். சமூகங்களுள் சமூக மாற்றம் என்பது அதன் காலம், வேகம் என்பவைகளில் தங்கியுள்ளது எனலாம்.
சமூகமாற்றமானது அறிஞர்களால் பல வகைகளில் விளக்கப்படுகின்றது. சமூகமாற்றமானது பண்பாட்டு மாற்றத்துடன் அடிக்கடி பரஸ்பரமாற்றம் கொள்ளத்தக்க வழக்கமுடையது. இதனையே மானுடவியலாளர்கள் சமூகமாற்றத்தை பண்பாட்டு மாற்றம் எனக் கூறுகின்றனர். மேலும் இவர்கள் சமூக மாற்றச் செயற்பாங்கில் புதிய முறையினைக் காணுதல், பரப்புதல், தன்மயமாதல், பண்பாட்டுப்பேறு ஆகியவை தொடர்புபட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால் மக்கள் மனப்பான்மையில் ஏற்படும் மாற்றத்தினையே சமூக மாற்றம் என உளவியலாளர்கள் கூறுகின்றனர். ஆனால் மக்கள் மனப்பான்மையில் ஏற்படும் மாற்றங்கள் அல்லாமல் சமூக உறவுகள், சமூக நெறிகள், சமூக வழக்கங்கள் முதலியவைகளில் மாற்றம் ஏற்பட முடியாது என்பதே இவர்களின் கூற்றாகும். (வாழ்வியல் களஞ்சியம், தொகுதி – 08).
மேலும், மோரிஸ்), கின்ஸ் பேர்க் என்பவர்களின் கருத்துப்படி, 'சமூக செயன்முறையில் காணப்படுகின்ற கட்டமைப்பு நடைமுறை, விழுமியம், நியமம், உளப்பாங்கு என்பவற்றில் ஏற்படும் மாற்றம் சமூக மாற்றம் என்கின்றனர்'.
சமூக மாற்றம் பற்றி மெக்ஐவர் , பேஜ் ஆகிய அறிஞர்கள் குறிப்பிடும் போது, 'வாழ்கை முறையில் ஏற்படும் மாற்றம் சமூக மாற்றம்' எனக் கூறுகின்றனர். இவர்களின் கருத்துப்படி, சமூக மாற்றம், பண்பாடு, நாகரீகம் ஆகியவற்றின் மாற்றங்களிலிருந்து மாறுபடுகினறது. ஆனால் பெரும்பாலான சமூகவியல் அறிஞர்கள் சமூகம், பண்பாடு, நாகரீகம் ஆகிய மூன்றிலும் ஏற்படும் மாற்றங்களை சமூக மாற்றம் என்கின்றனர். (வாழ்வியல் களஞ்சியம், தொகுதி – 08).
சமூக மாற்றத்தின் பண்புகள்
1. சமூக மாற்றமானது இயற்கை:
எந்த ஒரு சமுதாயமும் நிலையான தன்மை கொண்டது அல்ல, சமூக மாற்றம் அனைத்து சமூகங்களிலும் ஏற்படுகின்றது. அது தொன்மைச் சமதாயமாக இருந்தாலும் சரி, தற்கால அறிவியல் வளர்ச்சி அடைந்த சமூதாயமானலும் சரி அவ்வகையில் சமூக மாற்றம் ஏற்படுவது இயற்கையான ஒன்றாகும்.
2. சமூக மாற்றத்தின் வேகம் வேறுபட்டது:
சமூக மாற்றத்தின் வேகம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சமூக மாற்றத்தின் வேகம் எவ்வாறு சமூகத்துக்கு சமூகம் வேறுபடுகிறதோ, அதே போல் ஒரே சமூதாயத்திலும் வௌ;வேறு காலகட்டங்களில் அதன் வேகம் வேறுபடும். சில வேளைகளில் உணர முடியாத அளவுக்கு அதன் வேகம் குறைவாகாக் காணப்படும்.
3. சமூக மாற்றத்தின் தன்மை, வேகம் என்பன காலமாற்றத்தோடு தொடர்படையன:
சமூக மாற்றத்தின் தன்மையும், வேகமும் காலமாற்றத்தோடு தொடர்படையன. அவ்வகையில் கடந்த காலத்தோடு இக்காலத்தை ஒப்பிடும் போது தொழில்மயமாதல் அதிகம் ஏற்பட்டதால் அது ஏனைய துறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
4. முழு சமூதாயத்திலு; ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கின்றது:
சமூக மாற்றம் என்பது, தனிமனிதர்களின் வாழ்கையில் ஏற்படும் மாற்றத்தையோ, ஒரு சிலர் வாழ்கையில் ஏற்படும் மாற்றத்தையோ குறிப்பதில்லை மாறாக முழு சமூதாயத்திலு; ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கின்ற ஒன்றாகும்.
5. வடிவம், தன்மை, நோக்கம் என்பவற்றை முன் கூட்டியே தீர்மானிக்க முடியாது:
சமூக மாற்றத்தின் தன்மையையோ, வடிவத்தையோ, நோக்கத்தையோ ஒரவர் முன் கூட்டியே தீர்மானிப்பதென்பத கடினம். சமூக மாற்றம் இவ்வாறு தான் நிகழும் என்பதற்கு எவ்விதமான வரையறையும் இல்லை. சமூக மாற்றம் இயற்கையாகவோ, காலத்தின் போக்கிலோ திட்டமிட்ட முயற்சியின் காரணமாகவோ ஏற்படுவதுண்டு.
சமூக மாற்றக் காரணிகள்
1. பௌதீகக் காரணி:
உலகமானது எப்போதும் நிலையாக இருப்பதில்லை மாறாக புயல், பூகம்பம், மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன. இத்தகைய நிலையானது சமூகத்திலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.
உ-ம்;;: செல்வந்தர்களாக வாழ்ந்தவர்கள் அனர்த்தம் ஒன்று ஏற்பட்ட பின்னர் சொத்துக்களை இழந்து அவர்களின் வாழ்கைக் கோலத்தில் மாற்றம் ஏற்படல்.
2. உளவியல் காரணி:
சமூகத்தில் ஏற்படும் புதிய பழக்கவழக்கங்கள், செய்கைகள் முதலியவற்றை அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற எண்;ணம் சமூக மாற்றத்தை தூண்டுகின்றது.
3. தொழில் நுட்பக் காரணி:
தொழிநுட்ப வளர்ச்சி சமுதாய மாற்றத்தின் முக்கிய காரணிகளுல் ஒன்றாகும். அவ்வகையில் இயந்திரத் தொழிநுட்ப வளர்ச்சி சமுதாயத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்திருக்கின்றது. புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் இந்நூற்றாண்டில் உற்பத்திப்பெருக்கத்திற்கும், அறிவியல் வளர்ச்சிக்கும் அதன் மூலமான சமூக மாற்றத்திற்கும் துணைபுரிந்திருக்கின்றன.
4. பண்பாட்டுக் காரணி:
சமூகமும் பண்பாடும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவைகளாகும். அவ்வகையில் பண்பாட்டு மாற்றம் ஏற்படும் போது சமூக மாற்றமும் ஏற்படுகின்றது. பண்பாடானது சமூகமாற்றம் எந்தளவு வரை செல்ல வேண்டும் என்றும் தீர்மானிக்கின்றது.
5. சட்டக் காரணி:
சட்டமானது சமூகக்கட்டுபாட்டுக்கு உதவுவதுடன் மக்கள் அனைவரும் சட்டத்திற்கு கீழ்படிந்து அதனைப் பின்பற்றும் போது சமூகக்கட்டுப்பாடும், சமூகக் கூட்டொருமைப்பாடும் ஏற்படுகிறது. சமுதாயதிலுள்ள தீய மற்றும் மூடப்பழக்கங்களை மாற்றுவதற்கும் உதவுகின்றது.
மேலும் திட்டக்காரணி, அரசியல், பொருளாதாரம், கல்வி, போக்குவரத்து, சமூக இடைவினை, நடப்பாங்கு, போன்ற காரணிகளும் சமூக மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளன.
சமூக மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள்
மக்களது சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்படும்.
நுண்மதி விருத்தியில் முன்னேற்றம் ஏற்படும்.
கல்வியில் மறுமலர்ச்சி.
நவீன சிந்தனைகளின் உள்ளீர்ப்பு.
மூடநம்பிக்கைகள் வழுவிழத்தல்.
சுகாதார ரீதியான முன்னேற்றம்.
பெண்களின் கல்வியில் முன்னேற்றம்.
அரசியலில் மக்களின் பங்கேற்பு அதிகமாக இருத்தல்.
தொழில் முறைமையில் காணப்படுகின்ற முன்னேற்றம்.
மக்களின் பொருளாதார நடவடிக்கையில் முன்னேற்றம்.
நடை, உடை, பாவனையில் மாற்றம்.
பொழுது போக்குத் துறையில் மாற்றம்.
பண்பாட்டில் மாற்றம்.
மக்களின் ஊக்கங்கள், விருப்புக்கள், இலக்குகள், மனோபாவங்கள் என்பவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றம்.
சமூக நடத்தையில் முன்னேற்றம்.
சமூக நடவடிக்கையில் மாற்றம்.
புதிய கலாசாரங்களின் ஈர்ப்பு.
சமூக மாற்றத்தினை ஏற்படுத்துவதில் காணப்படும் சவால்கள்
சமூக மாற்றமானது இயற்கையான ஒன்றாகும். அது மனிதர்களால் உருவாக்கப்படுகின்ற ஒன்றாக காணப்படுவதுடன் அது வேகமாகவும் ஏற்படுகின்றது. ஆன போதிலும் சமூகமாற்றம் ஏற்படுவதில் பின்வரும் காரணிகள் சவாலாக அமைகின்றன.
மக்கள் உறுதி நிலையினை விரும்புகின்றவர்களாக காணப்படுதல்.
சில விடயங்களில் தீங்கு இடம்பெறுகின்றமையினால் மக்கள் அதனை பின்பற்றுவதற்கு அஞ்சுகின்றவர்களாக் காணப்படுதல்.
அறியாமை.
பழக்க வழக்கங்களும், மரபுகளும்.
திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலுள்ள நிதித் தட்டுப்பாடு.
உரிமைக் கும்பல்.
இவ்வாறான சமூக மாற்றத்தடைகள் அனைத்தும் முழவதும் தீமையானவை அல்லது தடையானவை என்று கூறமுடியாது. அதாவது சில சமூக மாற்றங்களினால் சமூகத்திற்கு தீங்கோ அல்லது பாதிப்போ ஏற்படலாம்.
சமூக மாற்றமானது பல நன்மை பயக்கின்ற விடயங்களை செய்கின்ற அதேவேளை சில தீமைகளையும் ஏற்படுத்துகின்றது என்பதனையும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். அதாவது, சமூக மாற்றத்தின் மூலம் சமூகங்கள் அபிவிருத்தி, வளர்ச்சி என்பவைகளைப் பெற்றுள்ள அதேவேளை சமூக மாற்றத்தினால் சமூகங்கள் உள்ளார்ந்த ரீதியில் ஆரோக்கியமற்ற தன்மைகளையும் பெற்றுள்ளது. இதனால் சமூகத்தினுள் முரண்பாடுகள், விழுமிய, நியம உடைவுகள், குற்றச் செயல்கள் அதிகரிப்பு, தற்கொலைவீதம் அதிகரித்துச் செல்லல், நியமமறு நிலை, பாலியல் நெறிபிறழ்வு என்பவைகளையும் தோற்றவித்துள்ளன என்றால் மிகையாகாது.
உசாத்துணை நூல்கள்:
1. Georgy
M. Foster, (1975), “Traditional Society and Technological Change”, Allient
Publishers Pvt.,Madras.
2. சண்முகலிங்கம்.N,(2000),'பண்பாட்டின் சமூகவியல், குமரன் பதிப்பகம், கொழும்பு.
3. வாழ்வியல் களஞ்சியம், தொகுதி – 08, தஞ்சாவூர் பல்கலைக்கழகம், இந்தியா.
4. http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5536:2009-03-25-07-20-11&catid=106:thamizach(2012.03.24)
உங்களது கட்டுரைகளை எமக்கு அனுப்பி வைக்கலாம் newslineinfo@yahoo.com
No comments:
Post a Comment