கணவர் வெண்சுருட்டு புகைப்பதால் அவரிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று சவூதி பெண்மணி ஒருவர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். சவூதி அரேபியாவின் சமூக வலைத்தளங்களில் இச்செய்தி பரபரப்பாக; சாதக பாதகமாகப் பேசப்படுவது குறிக்கத்தக்கது. "அப்பெண்ணின் கோபம் நியாயமானது என்றாலும் குடும்பத்தைப் பாதிக்கும் மணவிலக்கு முடிவை கைவிட வேண்டும்" என்று பெரும்பாலான இணையப் பயனர்கள் கருத்தளித்துள்ளனர்.
மனைவியின் மணவிலக்குக் கோரல் பற்றி கூறிய கணவர் "நான்கு வருடங்களுக்கு முன், எங்கள் திருமணத்தின் போது, புகை பிடிக்கக் கூடாது என்று மனைவி நிபந்தனை விதித்தது உண்மை தான்" என்று நினைவு கூர்ந்தார். ஆயினும் மனைவிக்குத் தெரியாமல் தான் புகை பிடித்து வந்ததாகவும், குறிப்பிட்ட நாளன்று பக்கத்து வீட்டார் ஒருவருடன் இணைந்து புகை பிடித்துக் கொண்டிருந்ததை மனைவி பார்த்து விட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அந்தக் கணவர் கூறினார்.
உடனடியாக, தன் சகோதரரை வரவழைத்து, குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி ஜெத்தாவிலுள்ள தன் தாய் வீட்டுக்கு மனைவி சென்று விட்டதாகவும் அந்தக் கணவர் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபரில், புகை பிடிக்கும் கணவரிடமிருந்து விவாக விலக்கு கோரிப் பெற மனைவிக்கு உரிமை உண்டு என்று சவூதி அரேபிய நீதிமன்றம் ஒன்று கருத்தளித்திருந்தது நினைவு கூரத்தக்கது.
புனித நகரமான மதினாவில் மட்டும் சுமார் 100 சவூதி பெண்கள் புகை பிடிப்பதை கைவிட மறுக்கும் கணவரிடமிருந்து விவாக விலக்குக் கோரியுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபியாவில் சுமார் 60 இலட்சம் புகைப்பாளர்கள் இருப்பதாக கணக்காய்வு ஒன்று தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment