Pages

Sep 7, 2013

SLMC இன் அமோக வெற்றியை உறுதி செய்ய களத்தில் குதித்த அமைச்சர் பஷீர் சேகுதாவூத்

SLMC இன் அமோக வெற்றியை உறுதி செய்ய களத்தில் குதித்த அமைச்சர் பஷீர் சேகுதாவூத்

முஸ்லிம்களை தொடர்ந்தும் வெற்றி பெற்ற சமூகமாக வைத்திருக்கும் செயற்பாடுகளையே முஸ்லிம் காங்கிரசும் செய்கிறது என அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

அமைச்சர் பசீர் சேகுதாவூத் கண்டி மாவட்டத்தில் கலந்து கொண்ட முதலாவது பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர்மேற் கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அமைச்சர் பசீர் இலங்கையில் முஸ்லிம்கள் வெற்றி பெற்ற சமூகம். தனித்துவக் கட்சியை உருவாக்கி வெற்றி பெற்றுள்ளார்கள், கல்வி மட்டத்தில் உயர்ந்து வெற்றி பெற்றுள்ளார்கள், கலாச்சாரத்தில் ஆடை அணிவதில் வெற்றி பெற்றுள்ளார்கள், சமூகப் பொருளாதாரத்தில் வெற்றி பெற்றுள்ளார்கள், ஒற்றுமையில் வெற்றி பெற்றுள்ளார்கள் இதனைப் பொறுக்காத ஒரு சிறு தொகை பௌத்த பேரினவாதிகள் முஸ்லிம்களுக்கெதிரான பல்வேறு பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள். நம்மை நோக்கி குண்டு வரும்போது அதனைச் செயலிழக்கச் செய்யவேண்டுமே தவிர நெஞ்சைக் காட்டி நின்று பிழையான செய்திகளால் மக்களைக் குழப்பக்கூடாது. இது இன்னும் அவர்களது செயற்பாடுகளைக் கூட்டவே வழி வகுக்கும். குண்டுகளை செயலிழக்கச் செய்து முஸ்லிம்களை தொடர்ந்தும் வெற்றி பெற்ற சமூகமாக வைத்திருக்கும் செயற்பாடுகளையே முஸ்லிம் காங்கிரஸ் செய்கிறது.

இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் நாட்டை பிளவு படுத்தும் செயற்பாடுகளை எப்போதும் செய்யவில்லை, வெளிநாட்டு தீவிரவாதத்திற்கு இடம் கொடுப்பவர்கள் இலங்கை முஸ்லிம்கள் அல்ல என்பதை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்களைப் பற்றி பிழையான தகவல்களை சொல்லக் கூடாது.

கண்டி மாவட்டம் பல முஸ்லிம் தலைவர்களை தந்த மாவட்டம், மர்ஹூம் A .C .S . ஹமீத் அவர்களுக்குப்பிறகு கண்டி மாவட்டத்திலிருந்து உருவாகிய தலைவர்தான் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆவார் . கிழக்கு மாகாணம் பிரதேச வாதம், இனப்பற்று , மதவாதம் அதிகம் கொண்ட மாகாணம் , 1977ல் 10 லட்சம் முஸ்லிம்களின் தலைவராக இருந்து முஸ்லிம்களின் தலைவராக இருந்த மர்ஹூம் பதியுதீன் மஹ்மூத் அவர்களை தோல்வியடையச் செய்தவர்கள், ஆனால் தற்போது கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த எமது தலைவரை முஸ்லிம்களின் தலைவராக ஏற்று அவரை வெற்றியடையச் செய்து கொண்டிருக்கிறார்கள், எனவே கண்டி மாவட்ட மக்களுக்கு ஒரு பெரிய பொறுப்பு இருக்கிறது , தலைவரின் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசை வெற்றி பெறச்செய்ய எல்லோரும் ஒற்றுமைப் பட வேண்டும். இன்னும் 50 வருடங்களுக்கு இன்னும் ஒரு முஸ்லிம் தலைவர் உருவாவது கஷ்டம்.

ஒரு தோப்பில் அடுத்தடுத்துள்ள மரங்கள் காற்று வீசும்போது உரசிக்கொள்ளும், இதன்போது சத்தம் வரும், இந்த உரசல் தொடர்ந்து இருந்தால் மரங்கள் எரிந்து விடும். இதேபோலத்தான் முஸ்லிம் காங்கிரசுக்குள்ளும் சில கருத்து விடயங்களில் எங்களுக்குள் உரசல் வரும், ஆனால் மரங்கள் பற்றி எறிவதற்கு முன்பே நாங்கள் ஒரே கருத்துக்குள் வந்து விடுவோம் என மேலும அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கண்டி மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களான ஜவாஹிர் சாலி ஐ. ஐனுதீன் , ரசீம் ஹாஜியார் ஆகியோரும் கலந்து கருத்துக்களை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment