வழக்கத்திற்கு மாறாக ஜோர்டான் நாட்டு ராணிக்கு போப்பாண்டவர் பிரான்சிஸ் தலைவணங்கி வணக்கம் செலுத்தியது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
முஸ்லிம் நாடான ஜோர்டான் நாட்டு ராணி ரனியா தனது கணவர் மன்னர் 2ம் அப்துல்லாவுடன் வாடிகன் சிட்டிக்கு வந்திருந்தார்.
அங்குள்ள போப்பாண்டவரின் நூலகத்தில் இருவரும், போப்பாண்டவர் பிரான்சிஸை சந்தித்தனர்.
அப்போது வழக்கத்திற்கு மாறாக தலைவணங்கி ராணிக்கு வணக்கம் வைத்ததுடன், கை பிடித்து குலுக்கியும் போப்பாண்டவர் வரவேற்றார்.
இதேபோன்று மன்னர் 2ம் அப்துல்லாவுக்கும் தலைவணங்கி வணக்கம் கூறினார்.
இதுகுறித்து வாடிகன் சிட்டி அதிகாரி ஒருவர் கூறுகையில், போப்பாண்டவர் பிரான்சிஸ் மிகவும் எளிமையானவர், மரபுகள் குறித்துக் கவலைப்படாதவர்.
போப்பாண்டவராவதற்கு முன்பு எப்படி இருந்தாரோ அதேபோலத்தான் இப்போதும் சாமானியராக இருக்கிறார் என்றார்.
19ம் நூற்றாண்டு வரை போப்பாண்டவர்களை யார் சந்தித்தாலும் அவரது செருப்புகளுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்ற மரபு இருந்தது.
பின்னர் அது மாறி தலைவணங்கி வணக்கம் செலுத்தும் மரபு உருவாக்கப்பட்டது. ஆனால் அதை உடைத்தெறிந்துள்ளார் போப்பாண்டவர் பிரான்சிஸ்.
இந்த நிகழ்ச்சிக்கு முன்புதான் செயின் பீட்டர் பசிலிகாவுக்கு வந்திருந்த இளம் இத்தாலிய யாத்ரீகர்களை சந்தித்த போப்பாண்டவர், அவர்களுடன் சேர்ந்து நின்று செல்போனில் படம் பிடிக்க போஸ் கொடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

No comments:
Post a Comment