Pages

Sep 3, 2013

நீதிமன்றங்களின் நியாயாதிக்க எல்லை மீள் நிர்ணயம் தொடர்பிலான அறிக்கை கையளிப்பு !

நீதிமன்றங்களின் நியாயாதிக்க எல்லை மீள் நிர்ணயம் தொடர்பிலான அறிக்கை கையளிப்பு!

நீதிமன்றங்களின் நியாயாதிக்க எல்லைகளை மீள் நிர்ணயம் செய்ததன் பின்னர் நாட்டின் சில பிரதேசங்களில் பொது மக்களுக்கும் வழக்காளிகளுக்கும் சட்டத்தரணிகளுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சீர்தூக்கிப் பார்த்து, அவற்றைப் பரிசீலித்து அவை தொடர்பான விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், தமக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி அமைத்த குழுவினர் அது தொடர்பான அறிக்கையை அமைச்சரிடம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை நீதியமைச்சில் வைத்து அமைச்சரிடம் கையளித்தனர்.

நீதிமன்றங்களின் நியாயாதிக்க எல்லைகள் சம்பந்தமான 2010 நவம்பர் மாதம் 10 ஆம் திகதி கொண்ட இலக்கம் 1679/40 இலக்க வர்த்தமானி அறிவித்தலை தொடர்ந்து, அதனால் அசௌகரியங்களையும், நேர விரயத்தையும், தேவையற்ற தாமதத்தையும் எதிர்நோக்கிய பொது மக்களினதும் சட்டத்தரணிகளினதும் கருத்துக்களைப் பெற்று எழுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான சிபாரிசுகளை பெறுவதற்காக நீதியமைச்சர் ஹக்கீம், மேல் நீதிமன்ற நீதியரசர் நிமல் காமினி அமரதுங்க தலைமையில் இதற்கான குழுவை நியமித்திருந்தார்.

அக்குழுவில் இலங்கை சட்ட மன்றத்தின் செயலாளர் சஞ்சய கமகே, சட்டத்தரணி ஜயந்த பதிரன, நீதியமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (சட்டம்) பியுமந்தி பீரிஸ், சட்டத்தரணி மஹிந்த லொக்குகே ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

இந்த அறிக்கையை உரிய காலத்தில் அதிக ஈடுபாட்டுடன் தயாரித்து தம்மிடம் கையளித்ததற்காக நீதியமைச்சர் ஹக்கீம் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.


No comments:

Post a Comment