வடக்கு, வடமேல் மற்றும் மத்திய ஆகிய மூன்று மாகாண சபைகளுக்குமான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை நடைபெறவிருக்கின்ற நிலையில் அந்த மூன்று மாகாணங்களிலும் மும்முனைப் போட்டி நிலவுகின்றது.
இந்த மூன்று தேர்தல்களிலும் வாக்களிப்பதற்கு 43 இலட்சத்து 63 ஆயிரத்து 251பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிக்கவென 3,712 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த மூன்று மாகாண சபைகளுக்கும் போனஸ் ஆசனங்கள் உட்பட 142 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டிய நிலையில் 3,785 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.
தேர்தல் கடமைகளுக்காக அரச உத்தியோகஸ்தர்கள் 40 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்களென 5000 பேர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தேர்தல்களை கண்காணிக்கும் கண்காணிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சார்க் நாடுகளின் கண்காணிப்பாளர்களும் பொதுநலவாய அமைய நாடுகளின் கண்காணிப்பாளர்களும் பார்வையாளர்களும் இந்த தேர்தல்களை கண்காணிப்பதற்கும் அவதானிப்பதற்கும் வருகை தந்துள்ளமை விசேட அம்சமாகும். இவர்களில் பெரும்பாளானோர் கடந்த சில வாரங்களுக்கு முன்பாகவிருந்தே வடக்கில் முகாமிட்டுள்ளனர்.
வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலேயே போட்டி நிலவுகின்றது.
மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களை பொறுத்தவரையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மூன்றாவது சக்தியென கூறப்பட்ட மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலேயே போட்டி நிலவுகின்றது.
வாக்களிப்பு காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறும் என்று அறிவித்துள்ள தேர்தல்கள் திணைக்களம், மாலை 4.30 மணியளவில் தபால் மூல வாக்களிப்புகள் எண்ணப்படும் என்றும் இந்த மூன்று மாகாண சபைகளுக்குமான முதலாவது தேர்தல் முடிவு இன்றிரவு 10.30 மணியளவில் வெளியிடக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள தேர்தல்கள் திணைக்களம், நேரகாலத்துடன் சென்று வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
வட மாகாணம்
வடமாகாண சபைத் தேர்தலில் 38 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 719இ356பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து 16பேரும், மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து தலா ஐவரும் வவுனியாவிலிருந்து அறுவரும் கிளிநொச்சியிலிருந்து நால்வரும் தெரிவுசெய்யப்படவிருப்பதுடன் இரண்டு மேலதிக உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவர்.
14 தேர்தல் தொகுதிகளில் நடைபெறும் இந்த தேர்தலில், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 426,703பேரும் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 53,683பேரும் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 68,589பேரும் வவுனியா மாவட்டத்திலிருந்து 94,644பேரும் மன்னார் மாவட்டத்திலிருந்து 75,737பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் 10 தேர்தல் தொகுதிகளும் ஏனைய நான்கு மாவட்டங்களில் தலா ஒவ்வொரு தேர்தல் தொகுதியும் உள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊர்காவற்துறை, வட்டுக்கோட்டை, காங்கேசன்துறை, மானிப்பாய், கோப்பாய், உடுப்பிட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி, நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய 10 தேர்தல் தொகுதிகளிலிருந்து 426,703பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். அத்துடன், யாழ்ப்பாணத்தில் 526 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து நான்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 68,589 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 95 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் 75 ஆயிரத்து 737 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளதாக மன்னார் தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் வடமாகாண சபை தேர்தலுக்காக மன்னார் மாவட்டத்தில் 12 கட்சிகளும் 8 சுயேட்சைக்; குழுக்களும் உள்ளடங்கலாக 20 கட்சிகள் போட்டியிடுகின்றன.
மன்னார் மாவட்டத்திலிருந்து 5 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 20 கட்சிகளைச் சேர்ந்த 160 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். வவுனியா மாவட்டத்தில் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ள 94,644 பேர் வாக்களிப்பதற்காக 89 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக வவனியா தேர்தல்கள் பணிமனை தெரிவித்தது.
இதேவேளை இடம்பெயர்ந்த வாக்காளர்களாக இக்கிரிக்கொல்லாவை சாளம்பபுரத்தில் 899 வாக்காளர்களும் யாழ்ப்பாணம், கொக்குவில் பிரதேசத்தில் 3 வாக்காளர்களும் வாக்களிக்கவுள்ளதாகவும் அவர்களுக்கு அப்பிரதேசங்களில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மத்திய மாகாணம்
இதேவேளை வெளிமாவட்டங்களில் இருந்து தேர்தல் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள 250 உத்தியோகத்தர்களுடன் மொத்தமாக சுமார் 1400 உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மாவட்ட செயலகத்தில் வாக்கு எண்ணும் நிலையங்கள் 10 அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இத்தேர்தலில் கடந்த வாரம் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பில் வவுனியா மாவட்டத்தில் 1402பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 1370 பேர் வாக்களித்துள்ளதாகவும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 53,683 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.
அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் 50 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையிலும் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.
இதேவேளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயகக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், உள்ளிட்ட 11 அரசியல் கட்சிகளும், 2 சுயேட்சைக் குழுக்களுமாக 13 கட்சிகள் இம்மாவட்டத்தில் போட்டியிடுகின்றன.
38 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக யாழ். மாவட்டத்தில் 380 வேட்பாளர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் – 91, மன்னார் – 160, வவுனியா – 171 முல்லைத்தீவு – 104 வேட்பாளர்களென 906பேர் போட்டியிடுகின்றன.
மத்திய மாகாண சபைத் தேர்தலில் 58 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 1இ889இ557பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
கண்டி மாவட்டத்திலிருந்து 29பேரும், மாத்தளை மாவட்டத்திலிருந்து 11பேரும் நுவரெலியா மாவட்டத்திலிருந்து 16பேரும் தெரிவுசெய்யப்படவிருப்பதுடன் இரண்டு மேலதிக உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவர்.
வடமேல் மாகாணம்
வடமேல் மாகாண சபைத் தேர்தலில் 52 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 1,754,218பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். குருநாகல் மாவட்டத்திலிருந்து 34பேரும், புத்தளம் மாவட்டத்திலிருந்து 16பேரும் தெரிவுசெய்யப்படவிருப்பதுடன் இரண்டு மேலதிக உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவர்.
இந்த 142 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக அரசியல் கட்சிகளிடமிருந்து 210 வேட்பு மனுக்களும் சுயேட்சைக் குழுக்களிடமிருந்து 201 வேட்பு மனுக்களும் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment