Pages

Aug 29, 2013

நுரைச்சோலை வீடுகள் யாருக்காக கட்டப்பட்டதோ அவர்களுக்கு அவை வழங்கப்பட வேண்டும்

அக்கரைப்பற்று நுரைச்சோலையிலுள்ள வீடமைப்புத் தொகுதி வீணாக கிடக்கிறது. அது யாருக்காக கட்டப்பட்டதோ அவர்களுக்கு வழங்க வேண்டும் என கல்முனை சுபத்ராராமய விகாராதிபதி வண. ரண்முத்துகல சங்கரத்தின தேரர் தெரிவித்தார்.

காரைதீவில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாடு மற்றும் மொழி அமுலாக்கம் பற்றிய கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
காரைதீவு பிரதேச செயலகத்தில் மனித அபிவிருத்தித் தாபனம் ஏற்பாடு செய்த இக் கூட்டம் பிரதேச செயலாளர் சிவஜெகராஜன் தலைமையில் நடைபெற்றது.

அங்கு அவர் மேலும் கூறியதாவது;

“அனைத்து இன மக்களும் ஒன்றிணையும் பொதுவான கூட்டங்களில் உரையாற்றுவோர் இனவாதம் பேசக்கூடாது. மக்கள் நிம்மதியாகவே வாழ விரும்புகின்றனர். ஆனால் சிலர் அதனைக் குழப்பி குளிர்காய நினைக்கின்றனர். அதற்கு இடமளிக்கலாகாது

நாட்டில் வாழும் அனைவரும் தமிழ், சிங்கள மொழிகளில் சரளமாகப் பேசவேண்டும். நாட்டின் தலைவர் ஜனாதிபதியே அழகாக தமிழ் பேசும் போது ஏன் நம்மால் பேச முடியாது.

அதேபோல் தமிழ் மக்களும் சிங்களத்தைப் பேச வேண்டும். தேசிய ஒற்றுமை பற்றிப் பேசுகின்றோம். ஆனால் பள்ளிவாசல்களும், ஆலயங்களும் தாக்கப்படுகின்றன. இது ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தாது.
கல்முனையிலுள்ள சிங்கள மகா வித்தியாலயத்தை, சிங்களம் கற்கும் மத்திய ஸ்தானமாக மாற்றி சிங்களம் கற்கும் இடமாக மாற்ற வேண்டும். பெளத்த சமயம் எப்படியோ, அப்படித்தான் ஏனைய சமயங்களும். எந்த சமயமும் பின்தங்கியதல்ல. சமயத் தலைவர்கள் வெறும் காட்சிப் பொருட்களாக மேடையில் அமர்த்தப்படுகின்றனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment