நிசாம்
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எம். தாஸிம் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. அரசசேவை ஆணைக்குழு – மேற்படி வைத்திய அத்தியட்சகரைப் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதோடு, குற்றப்பத்திரத்தினையும் வழங்கியுள்ளது.
வைத்திய அத்தியட்சகர் எம்.எம். தாஸிம் பல்வேறு ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சுகாதார அமைச்சு அதிகாரிகள் மேற்படி விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையினால் சுகாதார அமைச்சின் நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 90 லட்சம் ரூபாய் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் மோசடி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
மேற்படி 90 லட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கென சுகாதார அமைச்சிலிருந்து பணம் பெறப்பட்டிருந்த போதும், கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் மருத்துவ உபகரணங்கள் எவையும் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்படவில்லை எனவும், வைத்தியசாலை ஆவணங்களில் அவை பற்றிய பதிவுகள் எவையும் இடம்பெறவில்லை எனவும் கூறப்படுகிறது.
சுகாதார அமைச்சு நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்கள் மறைக்கப்பட்டு, அவைகளுக்குப் பதிலாக – யுனிசெப் அமைப்பிடமிருந்து பெறப்பட்ட மருத்துவ உபகரணங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இதேவேளை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எம். தாஸிம் என்பவர் - தனது தனிப்பட்ட தேவைகளுக்காக 04 தடவைகள் வெளிநாடு சென்றிருந்ததாகவும், அப் பயணங்களின்போது, அனுமதிக்கப்பட்ட விடுமுறையினை விடவும் 30 நாட்கள் அதிகமாக வெளிநாடுகளில் தங்கிருந்ததாகவும் தெரியவருகிறது.
மேலும், குறித்த அத்தியட்சகர் வெளிநாட்டில் மேலதிகமாகத் தங்கியிருந்த 30 நாட்களும் கடமையில் இருந்ததாகக் காட்டியுள்ளதோடு, அந்த நாட்களுக்குரிய சம்பளம், மேலதிகக் கொடுப்பனவுகள் மற்றும் பிரயாணக் கொடுப்பனவுகள் உள்ளிட்டவற்றினைப் பெற்றுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இவ்வாறு இவர் பெற்றுக்கொண்ட தொகையானது சுமார் 01 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாகும்.
இதேவேளை, குறித்த அத்தியட்சகர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் பொருட்டு – அக்கரைப்பற்றிலிருந்து கொழும்புக்கு தனது குடும்பத்துடன் பயணிப்பதற்காக 08 தடவைகள் வைத்தியசாலைக்குச் சொந்தமான அம்புலன்ஸ் வண்டியைப் பயன்படுத்தியதாக விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தப் பயணத்துக்காக வைத்தியசாலையின் நிதியிலிருந்து சுமார் 03 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
மேற்படி அத்தியட்சகர் தாஸிம் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் தனக்கு அனுமதிக்கப்படாத நிதியிலிருந்து சுமார் 02 மில்லியன் ரூபாவினை மோசடியாகப் பெற்றிருந்தார் எனவும் தெரியவருகிறது.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில், ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததையடுத்து, வைத்திய அத்தியட்சகர் தாஸிம் - மோசடியாகப் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் ஒரு தொகைப் பணத்தினை மீளவும் வைத்தியசாலைக்குச் செலுத்தியிருந்தார்.
வைத்தியசாலையிலிருந்த மோசடியாகப் பெற்றுக் கொண்ட 09 லட்சத்து 89 ஆயிரத்து 750 ரூபாவினை வைத்திய அத்தியசட்சகர் தாஸிம் மீளவும் வைத்தியசாலைக்குச் செலுத்தியதாக தெரிய வருகிறது.
மேற்கண்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே, தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எம். தாஸிம் அவருடைய பணியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment