Pages

Aug 15, 2013

கிராண்ட்பாஸ் விவகாரத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பதில் பொலிஸார் தீவிர கவனம்

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக விடுத்த அறிக்கையையும், அமெரிக்க தூதரகம் விடுத்த அறிக்கையையும் தொடர்ந்து அந்தப் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டிருந்தவர்களை தேடிக்கண்டு பிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அதற்காக தாக்குதலின் போது பிடிக்கப்பட்ட வீடியோ காணொளிகளை பொலிஸார் தற்பொழுது நுணுக்கமாகப் பார்வையிட்டு வருவதாக அறியக் கிடைப்பதாகவும் அவர் கூறினார்.

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்தின் பின்னணி மற்றும் அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பில் விளக்கம் அளிக்கும் வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ’தாருஸ்ஸலாம்’ தலைமையகத்தில் திங்கட்கிழமை (12.08.2013) இரவு நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் பொழுதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.

அமைச்சருடன் மேல்மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அர்சாத் நிஸாம்தீன், கட்சியின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் முஹம்மத் அனஸ்,புள்ளிவிபரவியல் நிபுணர் எம்.ஐ.எம். மொஹிதீன், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எம்.ஏ.எம். நியாஸ் ஆகியோரும் இந்த மக்கள் சந்திப்பில் சமூகமளித்திருந்தனர்.

அங்கு கருத்து தெரிவிக்கும் பொழுது அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறியதாவது,

கிராண்ட்பாஸ் சுவர்ண சைய்த்திய மாவத்தையில் நிறுவப்பட்டுள்ள புதிய பள்ளியில் சமயக் கடமைகளை மேற்கொள்வதற்காக வழங்கிய கடிதத்தை பௌத்த சாசன அமைச்சின் செயலாளர் வாபஸ் பெற்றுள்ளார். ஜனாதிபதி புதிய பள்ளிவாசலுக்கு அனுமதி வழங்கியதாக அமைச்சர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு வார இறுதிப் பத்திரிகையொன்றில் முன்பக்கத் தலைப்புச் செய்தி வெளிவந்திருந்தது. அதனை அந்த அமைச்சரின் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அந்தப் பத்திரிகைக்குத் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜனாதிபதி தாம் அவ்வாறு கூறவில்லை என்கிறார்.

பிரஸ்தாப அனுமதிக் கடிதத்தை பௌத்த சாசன அமைச்சின் செயலாளரிடம் இருந்து பெறுவதற்கு வேறொரு மாவட்டத்திலிருந்து வந்து கொழும்பு மத்தியில் கவனம் செலுத்திவரும் முஸ்லிம் பிரதி அமைச்சர் ஒருவரே முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

பௌத்த சாசன அமைச்சின் செயலாளர் வழங்கிய அனுமதிக் கடிதத்தின் பிரதிகள் சுற்று வட்டாரத்தில் உள்ள பௌத்த விகாரைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை எல்லாமாகத்தான் நிலைமையை மோசமாக்கியுள்ளன.

பிரச்சினைகளை முறையாக அணுகத் தெரிய வேண்டும். தேர்தல் காலத்தில் வெறுமனே அரசியல் இலாபம் ஈட்டுவதற்காக பிரசித்தம் தேட முனைவது மிகவும் ஆபத்தானது.

கிராண்ட்பாஸ் சம்பவம் நிகழும் பொழுது நான் கண்டி மாவட்டத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தேன். எனக்கு தொலைபேசி அழைப்புக்கள் வந்த வண்ணம் இருந்தன. எனவே, மறுநாள் புத்தளத்திற்குச் செல்ல இருந்ததை ரத்துச் செய்துவிட்டு உடனடியாக கொழும்பு திரும்பினேன். வரும் வழியில் இரண்டு முறை பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோனுடன் தொடர்பு கொண்டு பொலிஸாரையும், விஷேட அதிரடிப்படையினரையும் அங்கு அதிகமாக அனுப்புமாறும், சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை அதிகரிக்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தேன். அவர் அதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார். அவர் கடமை உணர்ச்சியுள்ள மிகவும் நல்லவர். தன்னால் ஆனவற்றை அவர் செய்திருக்கின்றார். ஆனால் அவருடனும் தேவையற்ற விதத்தில் முரண்பட்டுக் கொள்கிறார்கள். அது ஜனாதிபதிக்கும் எட்டியிருக்கின்றது.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியின் இல்லத்தில் சென்று அவரைச் சந்தித்து இதுபற்றி மேற்கொள்ளவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பற்றி கலந்துரையாடினேன். கூட்டறிக்கையொன்றை தயாரிப்பதற்கு நாங்கள் தீர்மானித்தோம். அவர் அந்த பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்.

ஜனாதிபதி முதல் நாள் இரவு தமது இல்லத்தில் வந்து சந்தித்து உரையாடியதாக அமைச்சர் பௌசி கூறினார். நான் அமைச்சர் பௌசியுடன் இருந்த பொழுது பாதுகாப்புச் செயலாளர் அமைச்சர் பௌசியுடன் தொலைபேசியில் நான்கு தடவைகள் தொடர்பு கொண்டார்.

பாதுகாப்புச் செயலாளருடனான உரையாடலில் என்னையும் இணைத்துக்கொள்ள அமைச்சர் பௌசி என்னிடம் வினவிய பொழுது, அந்தச் சந்தர்ப்பத்தில் எனது தலையீட்டை நான் தவிர்த்துக்கொண்டேன்.

பகல் 1 மணிக்கு சிரேஷ்ட அமைச்சர் பௌசியின் இல்லத்தில் முஸ்லிம் அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும், மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவும், மேல் மாகாண சபை உறுப்பினர்களான நௌஸர் பௌசி, அர்ஷாத் நிஸாம்தீன், முஹம்மத் பாயிஸ் முன்னாள் இராஜதந்திரிகளான ஜாவித் யூசுப்,ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர், முன்னாள் அமைச்சர் பதியுத்தீன் மஹ்மூத்தின் புதல்வர் தாரிக் மஹ்மூத் ஆகியோரும் ஒன்று கூடி ஆராய்ந்த பின்னர் கைச்சாத்திடப்பட்ட கூட்டறிக்கையை ஊடகங்களுக்கு வெளியிட்டோம்.

பின்னர் பௌத்த சாசன அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் விவகாரம் தொடர்பான கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காக நாம் அங்கு புறப்பட்டுச் சென்றோம்.

பௌத்த சாசன அமைச்சின் செயலாளர், மாற்றுமத அமைச்சர்கள், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்,பௌத்த மதகுருக்கள் ஆகியோரும் பங்குபற்றிய அந்தக் கலந்துரையாடலின் போது காரசாரமான வாக்குவாதங்கள் ஏற்பட்டன. ஆயினும் ஏறத்தாழ மூன்றரை மணிநேரம் இந்த விவகாரம் பற்றி அலசி ஆராயப்பட்ட பின்னர், பள்ளிவாசல் தர்ம கர்த்தாவின் இணக்கத்தின் பேரில், பழைய பள்ளிவாசலிலேயே சமயக் கடமைகளை நிறைவேற்றுவதாக அறிவித்தார்கள்.

எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமை ஏற்படாதிருப்பதற்காக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மிகவும் நிதானமாகவும், சாணக்கியத்துடனும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

இந்த சந்திப்பில் பங்குபற்றியவர்களும் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment