Pages

May 9, 2013

முஸ்லிம்களும் தமிழர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலமிது - சிவசக்தி ஆனந்தன்


முஸ்லிம் மக்களும், தமிழ் மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலம் தற்போது ஏற்பட்டுள்ளதாக தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்  தெரிவித்துள்ளார்.
 
குற்றத்தடுப்பு பிரிவினர் அசாத் சாலியை கைதுசெய்து தடுத்து வைத்திருப்பதை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  
 
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அவரது கைதானது மாற்று கருத்துக்களை கொண்டுள்ளவர்கள் மற்றும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை அடக்கும் நடவடிக்கைகளில் ஒன்று.
 
நீதித்துறை மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை அடக்கும் வகையில் அரசாங்கம் இதற்கு முன்னரும் செயற்பட்டுள்ளது. தற்போது, அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
 
இந்திய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய போட்டி தொடர்பாகவே அசாத் சாலி கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த போட்டியில் கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் பல தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது என அசாத் சாலி குறித்த பத்திரிகை ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார். இவ்வாறான சூழலில், அந்த போட்டியை காரணமாக வைத்து அசாத் சாலி கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையானது அரசியல் பழிவாங்கலாகும். 
 
அண்மை காலமாக முஸ்லிம் மக்கள் மீது வன்முறைகள் ஏவிவிடப்படுகின்றன. அவர்களின் வழிப்பாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன. வர்த்தக நிலைங்கள் இலக்கு வைக்கப்படுகின்றன.  ஹலால் இரத்துச் செய்யப்பட்டு விட்டது. தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்த இனவாதிகள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கை தற்போது முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகிறது.
 
இவை அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அரசாங்கம், முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்த அசாத் சாலியை கைதுசெய்து தடுத்து வைத்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. 
 
தமிழ் மக்கள் மாத்திரமல்ல, தற்போது முஸ்லிம் மக்களும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிரான தாக்குதல் பொதுபல சேனா அமைப்பின் மூலம் ஏவி விடப்பட்டுள்ளது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராக இல்லை. இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அந்த அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாஙகத்தினால் முடியாது போயுள்ளது எனவும் சிவசக்தி ஆனந்தன் அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment