Pages

May 9, 2013


பொதுநலவாய மாநாடு மணமகள் இல்லாத திருமணம் போன்றது : ஹரீன் எம்.பி.

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானிய மகாராணி கலந்து கொள்ளாத நிலையில் அது மணமகள் இல்லாது இடம்பெறும் திருமணம் போன்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பொர்னாண்டோ தெரிவித்தார்.

ராஜகிரியவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இடபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானிய மகாராணி பங்கேற்க மாட்டார் என அறிவித்துள்ளார். கடந்த 40 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாற்றில் முதல் தடவையாக அவர் மாநாடொன்றில் கலந்து கொள்ளாத சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்நிலையில் இம் மாநாட்டில் மகாரணியின் மகன் கலந்து கொள்ளவுள்ளதாக
தெரிவிக்கப்பட்டாலும் அது ஒரு கண்துடைப்பே. நாடு பொருளாதார ரீதியில் வீழ்ந்துள்ள நிலையில் பெரும் எண்ணிக்கையில் பணம் செலவழித்து இதனை நடத்த வேண்டுமா?
இம் மாநாட்டில் அனைத்து நாட்டு பிரதிநிதிகளும் இங்கு வந்து ஆராய்ந்து ஏதாவது நிவாரணம் தருவார்கள் என்று அரசாங்கம் நினைக்கின்றது. அவர்கள் இங்கு வருவது அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுகின்றார்களா என்று ஆராய்ந்து, பேச்சு நடத்தி, அழுத்தம் கொடுக்கவே.
 இதனால் எமது நாட்டுக்கு எவ்வித பயனும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment