Pages

Apr 14, 2013

அஸ்வர் எம்.பி. அரசாங்கத்தின் வாலா..? சமூகத்தின் தலையா...??


மனிதனே..! ஏதாவது அசம்பாவிதம் உனக்கு நிகழ்ந்தால் அது உன்னிலிருந்து ஏற்பட்டவையே. (திருக்குர்ஆன் 4:79)

ஒரு நாட்டின் புனித இடமான பாராளுமன்றத்தில்  மக்களுக்காக மக்களின் பிரதிநிதிகள் பேசுவார்கள். அவ்வாறான இடத்தில் ஏ.எச்.எம்.அஸ்வர் எம்.பி பேசிய முக்கிய வார்த்தைகள் காலத்தால் அழியாத கல்லறைச் சிற்பமாய் இன்றும் என் காதுக்குள் ஒலிக்கின்றது. எவரையும் தாக்குவதற்கு இந்த வரிகளை சொல்லவில்லை  முஸ்லிம் இனத்தில் ஒருவர் நாட்டுக்கு ஏனையவர்களைவிட   விசுவாசமாக இருக்கின்றார் என்பதனை  அனைவரும் புரிந்து கொண்டு அவரைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவே எழுதுகின்றேன்.  

ஏ.எச்.எம்.அஸ்வர் எம்.பி யின் காலத்தால் அழியாத பாராளுமன்ற உரைகள்..

* 2012.10.28. ஜனாதிபதியின் திருநாமத்தை தினமும் உச்சரித்தால் அடுத்த பிறப்பில் நல்ல பிறவியாகப் பிறக்கலாம் மக்களுக்கு சகல பிரச்சினைகளும் தீரும் என்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார் .

* 2011.06.21. பிரபாகரனின் மனைவி பிள்ளைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவின் பராமரிப்பில் உள்ளார் என்று பாராளுமன்றத்தில் கூறினார். அடுத்த பாராளுமன்ற அமர்வில் தமிழ் செல்வனின் மனைவி பிள்ளைகள் என்று கூறுவதற்குப் பதிலாக பிரபாகரனின் மனைவி பிள்ளைகள் என்று கூறிவிட்டேன் என்று மன்னிப்புக் கேட்டார். 

* மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில்  முஸ்லிம்களின் எந்தவொரு பள்ளிவாயலும் தாக்கப்படவில்லை என பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

* பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கடவுளைப் போன்று நாட்டை அபிவிருத்திப் பாதையில் வழிநடாத்திச் செல்கின்றார் என்று பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றினார். பின்னர் அதனை மறுத்தார். ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டதாக குறிப்பிட்டார்.

* 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது பாலும் தேனும் வழிந்தோடும் வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்றத்தில் கவிதை பாடி ஜனாதிபதிக்கு புகழாரம் சூட்டினார். 

* இலங்கையில் தீவிரவாதத்தை தோற்கடித்ததற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில்  உரையாற்றினார்.

* தமிழகத்தில் பிக்குகள் தாக்கப்பட்டமையினைக் கண்டித்தும், அரந்தலாவையில் பிக்குகள் கொல்லப்பட்டதனையும் ஜெனீவாவில் விவாதிக்க வேண்டும் என பாராளுமன்றத்தில்  உரையாற்றினார்.

அஸ்வர் எம் .பி நான் அறிந்தவரையில் ஒரு தீர்க்கதரிசனம் உள்ள ஒரு மா மனிதர். நாங்கள் அவரை பாராட்ட வேண்டும் முஸ்லிம் சமூகத்தின் நலன் கருதி பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கும்  சிறந்த தேசியப் பட்டியல் தலைவன். 

முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படும் போது ஏன் வீண் பிரச்சினைகள் என்று பாராளுமன்றத்தில் வீணாக வாய்திறக்காமல் மதிநுட்பத்தின் மூலம் பிரச்சினைகளை தீர்க்கும் திறன்மிக்கவர். முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை பதவி பரிபோகக்  கூடாது என்ற விடயத்தில் கவனமாக இருக்கும் சிறந்த மனிதர். இப்படிப்பட்ட ஒருவர் நம் நாட்டுக்கு கிடைத்தது ஒரு வரம் என்று முஸ்லிம்கள் மனதால் நினைத்து திருப்தியடைய  வேண்டும். 

வாசகர்களுக்கு ஒரு சிறு குட்டிக் கதை  இந்தக் கதையினை நன்றாக வாசித்தால் நன்றாக புரியும்.

மரம்தான் மரத்தின் எதிரி

மரம் வெட்டும் ஒருவன் காட்டுக்குச் சென்று பெரிய மரம் ஒன்றினை வெட்டுவதற்காக கோடாரியினை எடுத்தான். அப்போது அந்த மரத்தின் அருகில் இருந்த மரம் சொன்னது பயப்படாதே மரமே அந்த கோடாரியில் பிடியில்லை பிடியில்லாமல் உன்னை வெட்ட முடியாது. பிறகு அந்த மரம் வெட்டுகின்றவன் இரண்டு அடி மரத்தில்  பிடி ஒன்றினை செய்து கோடாரியில் பொருத்தி மரத்தினை வெட்ட ஆரம்பித்தான். அப்போது வெட்டப்படுகின்ற மரம் அருகில் இருக்கும் மரத்தினைப் பார்த்து சொன்னது.  என் சக நண்பனே கோடாரி தனியாக இருக்கும் வரை நான் உயிரோடு இருந்தேன். என் இனத்தினை சேர்ந்த  இரண்டு அடி மரத்தின் பிடி கோடாரியுடன் சேர்ந்ததும்  என் உயிர் என்னை விட்டு பிரிகின்றதே. 

ஒரு காகம்  இன்னொரு காகத்தின் கண்களைக் கொத்தி சாப்பிடுவதில்லை !

வாசகர்களே இப்போது நான் உங்களிடம் விடும் கேள்வி ஏ.எச்.எம்.அஸ்வர் எம்.பி  அரசாங்கத்தின் வாலா ? சமூகத்தின் தலையா ?   

No comments:

Post a Comment