பெஷன் பக் தாக்குதல் எவர் நடத்தியிருந்தாலும் அவர்களை உடனே கைது செய்ய வேண்டும் பொதுபல சேனா..

பெப்பிலியானவில் அமைந்துள்ள பெஷன் பக் நிறுவனத்தின் களஞ்சியசாலை மீதான தாக்குதல் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு பொது பலசேனாவின் தலைமையகமான சம்புத்தத்வ ஜயத்தியில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அதன் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,
பெப்பிலியானவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமானது எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. அது இடம்பெற்றிருக்கவே கூடாத ஒரு சம்பவம். அதன் பின்னணியில் தேரர்கள், பொதுமக்கள் என எவர் இருப்பினும் உடன் அவர்களை கைது செய்து சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்.
குறித்த தாக்குதலுக்கு பொதுபலசேனா பின்னணியில் செயற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களிலும் தேசிய ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனை நாம் முற்றாக மறுக்கின்றோம். பொதுபலசேனா வன்முறையை தூண்டும் அமைப்பல்ல. குறித்த தாக்குதலால் பாதிப்படைந்த குறித்த நிறுவனத்துக்கும் காயமடைந்தவர்களுக்கும் எமது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நாட்டில் இன்று எங்கு ஒரு அசம்பாவிதம் இடம்பெற்றாலும் அதன் பழியை பொதுபலசேனா மீது போடும் ஒரு கலாசாரம் உருவாகியுள்ளது. 1983ஆம் ஆண்டு ஏற்பட்ட களவர நிலைமையை மீண்டும் ஏற்பட நாம் அனுமதிக்க முடியாது.
நாம் முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு எதிராகவே பேசினோம். முஸ்லிம்களுக்கு எதிராகவல்ல. முஸ்லிம்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறையையும் நாம் ஆதரிக்க மாட்டோம்.
அத்துடன் இவ்வாறான தாக்குதல்கள் எமது பெயருக்கும் பிரச்சினைகளையே ஏற்படுத்துகின்றன. எனவே குறித்த தாக்குதலோடு தேரர்கள் எவரேனும் சம்பந்தப்பட்டிருப்பினும் எவர் சம்பந்தப்பட்டிருப்பினும் பொலிஸார் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார்.VV
No comments:
Post a Comment