Pages

Mar 23, 2013

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை சித்திரை புதுவருடத்திற்கு முன்னர் வெளியிட நடவடிக்கை.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை சித்திரை புதுவருடத்திற்கு முன்னர் வெளியிட நடவடிக்கை.
கடந்த வருடம் நடைபெற்ற கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படவுள்ளன. ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகள் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
தற்போது பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும் பெறுபேறு வெளியிடப்படும் உறுதியான தினம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லையென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக சில பரீட்சை மத்திய நிலையங்களுக்கான பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் பரீட்சை நடத்தப்பட்டது. குறித்த பரீட்சார்த்திகளின் விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் தற்போது இடம்பெறுகின்றன. அவை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த வருடம் 5 இலட்சத்து 42 ஆயிரத்து 260 பேர் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். வழமைப் போன்று அனைத்து பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளும் இணையத்தளத்திலும் வெளியிடப்படும்.
அதற்கு மேலதிகமாக பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான பெறுபேறுகள் பாடசாலைகளுக்கும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான பெறுபேறுகள் அவர்களால் வழங்கப்பட்ட முகவரிக்கும் தபாலிடப்படுமென பரீட்சை ஆணையாளர் நாயகம் என்.ஜே.புஷ்பகுமார மேலும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment