Pages

Feb 9, 2013

வியக்க வைக்கும் மகளிர் உலகக்கிண்ண போட்டிகள் 2013
@ shareefa 
(s.k)
கிரிக்கெட்டில் ரசிகர்களாக இருந்தாலும், வெறியர்களாக இருந்தாலும், சாதரணமாக கிரிக்கெட்டை பார்பவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் அனைவரிடமும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற வீரர் யார்? என்ற கேள்வியை கேட்டால், பதிலாக சச்சின், சேவாக், சயீட் அன்வர் ஆகியோரின் பெயரையும், கூடிய ஓட்டத்தை பெற்ற நாடு எது? என்பதற்கு, இலங்கை என்ற பதிலும்தான் வந்து சேரும். அனால், அது எந்தளவு தூரத்துக்கு தவறான பதில் என்பதிலிருந்து நாங்கள் ஒரு விடயத்தை புரிந்துகொள்ளலாம். அது கிரிக்கெட் என்று வந்துவிட்டால், ஆண்கள் ஆடும் கிரிக்கட்டை கொண்ட உலகத்தை தவிர வேறு எதுவுமில்லை என்பதேயே ஆகும்.

women world trophy jan 28உண்மையில், ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய ஓட்ட பெறுதிகளுக்கு சொந்தகாரர், ஆஸ்திரேலிய மகளிர் அணியை சேர்ந்த BJ Clark பெற்ற 229 ஓட்டங்கள் ஆகும். அதி கூடிய ஓட்டத்தை பெற்ற நாடு நியூசிலாந்து (455/5) ஆகும். இப்படி நாங்கள் பார்க்க தவறிய தருணங்கள் நிறையவே இருக்கிறது மகளிர் கிரிக்கெட்டில்.........
ஆண்கள் கிரிக்கெட்டின் வரலாறு கூட, 1975ம் ஆண்டுதான் ஆரம்பித்த போதும், நாங்கள் தவறவிட்ட மகளிர் உலகக்கிண்ண போட்டிகள் 1973ம் ஆண்டு முதல் ஆரம்பித்து இருக்கிறது. ஆனால், ஆண்கள் கிரிக்கெட்டில் கிரிக்கட்டை ஆரம்பித்த இங்கிலாந்து – ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் குறுகிய காலத்தில் இல்லாது போய் விட்டாலும், மகளிர் கிண்ண போட்டிகளை பொறுத்தவரை இன்றுவரையும் அவர்களின் ஆதிக்கமே தொடர்கிறது. இது, இன்றும் எங்கள் நாடுகளில் நாங்கள் மகளிர் கிரிக்கெட்டிற்கு வழங்காத முக்கியத்துவத்தையே காட்டி நிற்கிறது.
40 வருடகால வரலாற்றை கொண்ட இந்த உலகக்கிண்ண போட்டிகளில் இதுவரை இடம்பெற்ற 9 உலகக்கிண்ண போட்டிகளிலும், ஐந்து தடவை ஆஸ்திரேலியாவும், மூன்று தடவை இங்கிலாந்து அணியும், ஒரு தடவை நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஆசிய அணிகளை பொறுத்தவரை மிக சிறந்த பெறுபேறாக 2005ம் ஆண்டு இந்திய மகளிர் அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியதை சொல்லலாம். இதை தவிரவும், இலங்கை, பாகிஸ்தான் அணிகளும் முயற்சி செய்து கொண்டு இருக்கின்றன.

இம்முறை, 10வது உலகக்கிண்ண போட்டிகள் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் எதிர்வரும் 31ம் திகதி மூன்றாவது முறையாக இந்தியாவில் ஆரம்பிக்க இருக்கிறது. மொத்தம் 18 நாட்களில், 25 போட்டிகள் நடைபெற இருக்கிறது. இம்முறை போட்டிகளில் 8 அணிகள் இரு வேறு குழுக்களாக பிரிந்து தலா நான்கு அணிகள் கொண்ட குழுவாக பங்குபற்ற இருக்கின்றன. இந்த, குழுநிலைப்போட்டிகளில் இரு குழுவிலும் முன்னிலை பெறும் மூன்று அணிகளும் அடுத்த Super Six குழுநிலை போட்டிகளில் பங்குபெறும். அதில் அனைத்து அணிகளும் ஒவ்வொரு அணியையும் எதிர்கொண்டு அவை, தரப்படுத்தபடும் அதன் அடிப்படையில், அணிகள் Playoff போட்டிகளில் பங்குபற்றி, இறுதிப்போட்டிக்கான அணிகளை தெரிவு செய்யும்.

இம்முறை போட்டிகளில் பங்குபெறும் அணிகளின் நிலவரத்தை சுருக்கமாக பார்த்தால், இம்முறையும் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான அதிக சாத்தியபாடுகளை இங்கிலாந்து மகளிர் அணி கொண்டிருப்பதாக குறிப்பிடபடுகிறது. Charlotte Edwards தலைமையில் களமிறங்கியிருக்கும் இங்கிலாந்து அணியில், Laura Marsh, Sarah Taylor ஆகியோர் பலமானவர்களாக இருக்கிறார்கள். இம்முறை, இடம்பெற்ற பல்வேறுபட்ட போட்டிகளிலும் அவர்கள் மிகதிறமையாக செயல்பட்டு இருக்கிறார்கள். இதிலும் குறிப்பாக, Sarah Taylor சசக்ஸ் பிராந்திய அணியின் இரெண்டாம் நிலை ஆடவர் அணியின் விக்கெட் காப்பாளராக தெரிவு செய்யப்படும் அளவுக்கு தனது திறமைகளை வெளிகாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவளை, ஆஸ்திரேலிய அணி அடுத்து உலகக்கிண்ணத்தை வெற்றி பெற கூடிய அணியாக இருக்கிறது. Jodie Fields தலமையில் களமிறங்கும் இந்த அணியில், கொஞ்சம் புதிய இரத்தம் பாச்சபட்டு, இம்முறை களம் காண்கிறார்கள். ஆனாலும், இவர்கள் உலகக்கிண்ண போட்டிகளுக்கே புதியவர்கள் தவிர, ஒருநாள்போட்டிகளுக்கு இல்லை என்பது கவனிக்கதக்கது. இதை தவிரவும், அடுத்தடுத்த வாய்ப்புக்களை அதிகமாக கொண்ட அணிகளாக, Suzie Bates தலைமையிலான நியூசிலாந்து அணியும், சொந்த மண்ணில் விளையாடும் Mithalai Raj தலைமயிலான இந்திய அணிக்கும் இருக்கிறது என்று சொல்லலாம். சொந்த மண்ணில் விளையாடுவதால், இந்திய அணிக்கு மைதானங்கள் வாய்ப்புக்களை வழங்க கூடியதாக அமையலாம். ஆனாலும், கடந்த ஒருவருடத்தில் அவர்கள் தங்கள் சொந்த மைதானங்களில் இடம்பெற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வி கண்டு இருக்கிறார்கள்.

இவர்களை தவிரவும் போட்டியில் பங்குபெறும் அணிகளில் தென்னாபிரிக்க அணி Super Six சுற்றை மேலே கூறிய அணிகளுடன் இணைந்து வலுவாக கடந்து வரகூடிய அணியாக இருந்தபோதிலும், இவர்கள் இன்னமும் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளையும் மிரட்டி பார்க்கும் சக்திகளாக உருவாகவில்லை என்பதும் குறிப்பிடதக்கதாகும்.
women world cup jan 28இம்முறை பங்குபெற்றும் எங்கள் நாட்டு அணி பற்றி ஏதும் இல்லையா? என்று கேட்பது புரிகிறது.Shashikala Siriwardene தலமையில் பங்குகொள்ளும் இலங்கை அணிக்கு இது 4வது உலகக்கிண்ண போட்டியாகும். கிண்ணத்தை வெற்றிகொள்ளும் அளவுக்கு திறமை கொண்டவர்கள் என்று சொல்லிவிட முடியாத போதிலும், கடுமையாக முயற்சி செய்தால், Super Six சுற்றுக்கு வருவது உறுதியாகும். இம்முறை இலங்கை மகளிர் அணியில், கொழும்பை சேர்ந்த Sharina Ravikumar என்கிற தமிழ்பெண்ணுக்கும் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கபெற்று இருக்கிறது. இலங்கையின் விளையாட்டு வரலாற்றில், சர்வதேச தரத்தில் பங்குகொள்ளும் தமிழ் வீர, வீராங்கனைகள் குறைவாக உள்ள போதிலும், பங்குகொள்ளுபவர்கள் தனிமுத்திரை பதிக்க என்றுமே தவறுவதில்லை. அந்தவகையில், Sharina Ravikumar அவர்களும் சாதனை புரிய Sportskalam சார்பாக எங்களின் வாழ்த்துக்கள்.
இதுவரையான 9 உலகக்கிண்ண போட்டிகளிலும் 15 வேறுபட்ட நாடுகள் பங்குபற்றி இருந்தாலும், அவற்றின் பங்குபற்றல்கள் குறைவடைந்து தற்போது 8 – 10 வரையான அணிகளே போட்டிகளில் பங்குபற்றி வருவது, மகளிர் கிரிக்கெட் மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவை இழந்து வருவது போல இருக்கிறது என்பது வருத்தத்துக்குரியது.
எனவே, எதிர்வரும் 30ம் திகதி ஆரம்பிக்க இருக்கும் மகளிர் கிரிக்கெட் போட்டிகளுடன் இணைந்து இருங்கள். முடிந்தவரை, கிரிக்கெட்டில் ஆடவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு வழங்கும் வெறித்தனமான ஆதரவை வழங்காவிட்டாலும், உதாசீனபடுத்தாது பாருங்கள். அதுவே, தற்போதைய நிலையில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கு நாங்கள் வழங்க கூடிய ஒரே மரியாதை ஆகும்.
@ shareefa 
(s.k)

No comments:

Post a Comment