கிழக்கு மாகாணசபையில் கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட அமைச்சரவைகளில், அம்பாறை மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களை உள்ளடக்கிய மாகாணசபையில், தொடராக அம்பாறை மாவட்டம் முதலமைச்சர் ஒருவரை பெறும் தகைமையை இழந்து வருகின்றது.
கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள மொத்த சனத்தொகையை எடுத்துக்கொண்டாலும் சரி கிழக்கு மாகாணசபையில் அங்கம் வகிக்கின்ற உறுப்பினர்களின் தொகையை எடுத்துக்கொண்டாலும் சரி அம்பாறை மாவட்டமே முன்னிலையில் இருக்கின்றது. இருந்தபோதும் கிழக்கின் முதலமைச்சர் என்ற அந்தஸ்த்து மாறிமாறி திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்குமே வழங்கப்பட்டு வரும் செயற்பாடானது அம்பாறை மாவட்டத்தில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து சில மாகாணங்களிலும் ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்றன. அந்த வரிசையில் கிழக்கு மாகாணசபையிலும் மாற்றங்கள் ஏற்படுவதாக கூறப்படுகின்ற போதிலும் கிழக்குமாகாண சபையை அமைப்பதில் கட்சிகளுக்கிடையே இழுபறிநிலை காணப்பட்டது. தமிழ் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் தங்களுக்கே முதலமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்று விவாதித்துக்கொண்டிருந்தனர்.
பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சரை தாங்களே பெறவேண்டும் என்ற தீர்மானத்தில் அவர்களால் ஏற்கனவே பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை கையில் எடுத்து, தற்போது முஸ்லிம் காங்கிரசின் கிழக்குமாகாணசபை முன்னாள் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அவர்களை முதலமைச்சராக அறிவித்துள்ளதாக உத்தியோகப்பற்றற்ற முறையில் அறிய முடிகிறது.
கிழக்குமாகாணசபை முதலமைச்சர் அம்பாறை மாவட்டத்துக்குத்தான் கிடைக்கும் என முஸ்லிம் காங்கிரஸ்காரர்களாலும் ஏனையோராலும் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மீண்டும் மட்டக்களப்புக்கு வழங்க எடுக்கப்பட்டுள்ள செயற்பாடானது அம்பாறை மாவட்ட மக்களை ஏமாற்ரும் செயலாகவே பரவலாகப்பேசப்படுகின்றன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தாயகம் எனப்பேசப்படும் அம்பாறை மாவட்டம்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அதிகமான வாக்குகளை வழங்கி, சுவாசம் வழங்கிக்கொண்டிருக்கும் பிரதேசமாகும். இருந்த போதும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பிற்பாடு அமைச்சர் றிசாத் பதுயுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் தனது அடையாளத்தை பதித்து வருவதும், முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவை கொண்டுவந்து ஐக்கிய தேசியக்கட்சிக்கு உயிருட்டி அக்கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்க்கும் அக்கட்சியைச் சார்ந்தவர்களுக்கும் கல்முனைக்கு பிரதிஅமைச்சர் வழங்கப்படாததும் அம்பாறைக்கு முதலமைச்சர் வழங்கப்படாததும் இனிப்பான செய்தியாகவே உள்ளது.
முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகத்துக்கு அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு வழங்கப்பட்டதன் ஊடாக அவரை மாவட்ட அபிவிருத்திக் குழுவின்தலைவராக நியமிக்க வாய்ப்பு இருப்பதால் அம்பாறையில் முதலமைச்சர் நியமிக்கப்பட்டுவிட்டல் குறித்த மாவட்ட அபிவிருத்திக் குழுவின்தலைவராக தன்னால் செயற்படமுடியாது என்ற காரணத்துக்காகவும் ஹாபீஸ் நசீருக்கு கட்சியின் தலைவர் கடமைப்பட்டவர் என்பதாலுமே முதலமைச்சர் பதவி மட்டக்களப்பு நோக்கி நகர்த்தப்பட்டுள்ளதாகவும் பேசப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும் பாராளமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதவூத் அவர்களும், செல்வந்தரும் மாகாணசபையின் முன்னாள் அமைச்சருமான ஹாபீஸ் நசீர் அவர்களும் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கையில் மட்டக்களப்பில் கட்சியை வளர்ப்பதற்காக முதலமைச்சர் பதவி வழங்கப்படுகின்றது, என்ற கருத்து சற்று யோசிக்கவே செய்கின்றது.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் தற்போதைய நிலை சான்ஏற முழம் இறந்குவதாகவே அமையப்போவது உண்மையே. அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் கோட்டைகளில் அதிகப்படியான வாக்குகளை தற்போதைய ஜனாதிபதி பெற்றிருப்பது, முஸ்லிம் காங்கிரஸ் தற்போதைய அணியுடன் சேர்ந்ததற்காக அல்ல என்பதயும், தபால்மூல வாக்குகள் அளிக்கப்பட்டதன் பின்னர்தான் முஸ்லிம் காங்கிரஸ் பொது அணியுடன் இணைந்து கொண்டது என்பதயும், முஸ்லிம் காங்கிரஸ் பொது அணியுடன் இணைந்திராவிட்டாலும் குறித்த வாக்குகளை பொது அணி பெற்றிருக்கும் என்பதயும் முஸ்லிம் காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் தனது அரசியல் முன்னெடுப்புகளை அனேகமாக அம்பாறையில் இருந்துதான் ஆரம்பித்து இருக்கின்றார். அதன்காரணமாகத்தான் அம்மக்கள் அவரது செயற்பாடுகளில் கவரப்பட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் ஒன்று திரண்டனர். தற்போதைய நிலை முஸ்லிம் காங்கிரசின் உயர்மட்ட உறுப்பினர்கள் அதிர்ப்தியுடனேயே இருப்பது போன்று தெரிகிறது. முஸ்லிம் காங்கிரசின் இவ்வாறான போக்கு எதிர்காலத்தில் பின்னடைவுகளை ஏற்படுத்தாது என்றும் கூற முடியாது.
மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களது காலத்தில் அம்பாறை மாவட்டம் பாரிய அபிவிருத்திகளை கண்டது உதாரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம், துறைமுகத்தில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகள் என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம் ஆனால் தற்போதைய நிலை அபிவிருதிகளைக்கண்டு பல ஆண்டுகளைக் தாண்டியநிலை.
கிழக்கின் முதலமைச்சர்தான் கொடுத்தாகிவிட்டது ஏனைய பதவிநிலைகளிலாவது அம்பாறை மாவட்டத்துக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமா? அல்லது அதிலும் புறக்கனிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment