இலங்கை ஒரு நாடு எனினும் இலங்கையிலும் 2 உலக மக்கள் காணப்படுகின்றனர். ஒரு வேளை மட்டும் நாளுக்கு உணவருந்தி 2 வேளை பட்டினியுடன் அதிகளவான வறிய மக்கள் வாழும் உலகமே ஊவாவிற்கு சொந்தமாகியுள்ளது. இன்னொரு உலகத்தில் அரசியல் அதிகாரத்தில் உள்ள குடும்ப அரசியலில் ருசி கண்ட ஒரு வர்க்கத்தினர் சுகபோகங்களை மக்களின் வரி பணத்தின் ஊடாக அனுபவித்து வருகின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியினதும் பிரதான எதிர்க்கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பசறை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் 68 ஆவது பேராளர் மாநாட்டில் (ஆண்டு விழாவில்) பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்பதவிக்கு வந்து 10 வருடங்கள் ஆகியும் மக்கள் வாழ்வில் சுபீட்சம் ஏற்படவில்லை. குடும்ப செல்வாக்குடன் முன்னெடுக்கப்படும் அரசியல் கலாசாரம் காரணமாக சாதாரண மக்கள் ஒருவேளை உணவுக்கு கூட வழியின்றி வீதிக்கு வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இன்று ஊவாவிலுள்ள வளங்கள் அரசாங்கத்தினால் சூறையாடப்பட்டு வெளிநாட்டவருக்கு விற்கப்படுகின்றன. வியலுவ மக்கள் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் அல்லல்படுகின்றனர். உமா ஒயா நீர் அம்பாந்தோட்டைக்கு திருப்பப்பட்டு வெளிநாட்டவருக்கு விற்கப்படுகின்றது. மக்கள் இன்று உண்மை நிலையை புரிந்து கொண்டு தெளிவடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment