Pages

Nov 20, 2013

நிந்தவூரில் கைது செய்யப்பட்ட 21 பேரும் நீதிமன்றில் ஆஜர்

கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியை மறித்து நிந்தவூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 21 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

வன்முறைகளை தூண்டியமை மற்றும் குழப்பத்தில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கும் கிராம மக்களுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மையை அடுத்து சுமார் 36 மணித்தியாலங்களுக்கு கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியை மூடி நிந்தவூரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று நிந்தவூர் பகுதிக்குச் சென்றிருந்த 300 க்கும் அதிகமான பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்ததுடன், கண்ணீர்ப்புகைப் பிரயோகமும் மேற்கொண்டிருந்தனர்.
இதனையடுத்து குறித்த வீதியூடான போக்குவரத்து வழமைக்குத் திரும்பியிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, குழப்பம் விளைவித்தவர்கள் என கூறப்படும் சிலரின் 8 மோட்டார் சைக்கிள்களும், 20 சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தன.

விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள் சிலர் நிந்தவூர் பகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றதாகவும், அவர்களில் சிலர் சிவில் உடையில் காணப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அதனையடுத்தே அந்த பிரதேசத்தில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

No comments:

Post a Comment