Pages

Sep 14, 2013

முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரித்து படைமுகாம், விகாரை அமைக்க முயற்சி

திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகளைச் சுவீகரித்து விகாரை அமைக்கவும் தொல் பொருள் ஆய்வுகளை மேற் கொள்ளவும் படை முகாம்களை விஸ்தரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக புல்மோட்டைப் பிரதேச மக்கள் விசனம் தெரிவிப்பதுடன் இதனை தடுத்து நிறுத்த முஸ்லிம் தலைவர்கள் முன் வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.

புல்மோட்டைப் பிரதேசத்திலுள்ள 13 ஆம் கட்டைப் பகுதி மற்றும் அரிசிமலை, பொன்மலைக்குடா, கொக்கிளாய், வீதிப் பகுதிகளிலுள்ள முஸ்லிம் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் சொந்தமான காணிகளை தொல் பொருள் ஆய்வு, விகாரை அமைத்தல், படைமுகாம் விஸ்தரித்தல், பூஜாபூமி வேலைத் திட்டம் ஆகியவற்றைக் காரணங்காட்டி சுமார் 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை சுவீகரிக்கும் நோக்கில் நில அளவை செய்யப்படுகின்றது.

புல்மூட்டை பிரதேச மக்கள் இது பற்றி மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மேற்படி திட்டங்களை காரணங்காட்டி மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள், குடியிருப்பு நிலங்கள், தரிசு நிலங்கள் ஆகியவற்றை சுவீகரிக்க அரசாங்கம் முயற்சி செய்துவருகின்றது. இதை தடுக்க முயற்சி செய்த எமது அரசியல் பிரதேச சபைத் தலைவர்கள் மதத் தலைவர்கள் ஆகியோரை கைது செய்ய முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன.

பாரம்பரியமாக விவசாயம் செய்த பெருந்தொகையான நிலங்கள் சுவீகரிக்கப்படவிருப்பதால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தமது நிலத்தை இழக்கவுள்ளனர். அத்துடன் பத்திரமும் உறுதியுள்ளவர்களின் காணிகள் கூட பறி முதல் செய்யப்படவுள்ளது. ஒரு சிலரிடம் பத்திரம் இல்லாதபோதும் அவர்கள் பலவருடங்களாக அக்காணிகளில் விவசாயம் செய்து வருவதுடன் குடியிருந்தும் கொண்டிருக்கிறார்கள்.

அரிசிமலை, விகாரை, நாகவிகாரை என்ற சிறிய சிறிய விகாரைகள் இருந்த இடங்களில் பெரும் விகாரைகளை அமைப்பதற்காகவே இம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் பொன் மலைக்குடா என்ற இடத்திலும் இன்னோர் இடத்திலும் கடற்படை, இராணுவ முகாம் விஸ்தரிப்பு செய்ய நினைக்கின்றார்கள். ஏற்கனவே இவ்விடங்களில் முகாம்கள் இருந்ததில்லையெனவும் கவலை தெரிவித்தனர்.

இது குறித்து பிரதேச அதிகாரியொருவரை தொடர்பு கொண்டு கேட்ட போது காணிப் பயன்பாட்டு மாவட்டக் குழுவினரின் ஆணைக்கு அமைய நிலை அளவைத் திணைக்களம் குறிப்பிட்ட இடங்களை அளக்க முற்பட்ட போதே அதை தடுத்துள்ளனர். பொது மக்கள் தொல் பொருள் ஆய்வுக்கென காணிகளை சுவீகரிக்கும் சட்டத்தின் பிரகாரமே சில பகுதி நிலங்கள் அளக்கப்பட்டன.

சில இடங்களில் எதுவித பத்திரமும் இல்லாமலும் சிலர் காணிகளில் குடியிருக்கிறார்கள். விவசாயம் செய்து வருகிறார்கள். இவற்றை சுவீகரிக்க மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழு முயற்சிகளை எடுத்தது. அரசியல் பல முள்ளவர்களே இந்த முயற்சிகளைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அவர் கருத்துத் தெரிவித்தார்.

கடந்த 10 ஆம் திகதி நில அளவைத் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட பிரதேச காணிகளை அளந்து எல்லையிட முற்பட்ட போது பொது மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். நில அளவை உத்தியோகத்தர்களை கடமை செய்ய விடாது தடுத்தார்கள் என்று குற்றச்சாட்டின் பேரில் ஐவர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர், குச்சவெளி பிரதேச சபை உதவித் தவிசாளர் ஏ.பி.தெளபீக் , பெரிய பள்ளிவாசல் தலைவர் கலீல்லெப்பை, கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் ஏ.எஸ்.ஜனியப்பிள்ளை , உலமா சபைத் தலைவர் ஆயூப் ஹான் மெளலவி ஆகிய ஐவரும் திருகோணமலை நீதிமன்றில் சரணடைந்ததைத் தொடர்ந்து ஐவருக்கும் 10 ஆயிரம் ரூபா சரீரப்பிணை வழங்கப்பட்டது.

புல்மூட்டை பிரமுகர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் வட மாகாண சபைத் தேர்தல் முடிவடைந்தவுடன் காணி அதிகாரங்கள் மாகாண சபைக்கு சென்று விடும் என்ற அச்சத்தின் காரணமாகவே காணிகளை இவ்வாறு சுவீகரிக்க முயற்சி செய்கிறார்கள் எனவே முஸ்லிம் தலைவர்களும் கிழக்கு மாகாண சபையும் இதை தடுக்க ஆவன செய்ய வேண்டுமெனக் குறிப்பிட்டார்.VV 

No comments:

Post a Comment