பாதுகாப்புச் செயலாளர் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற பாதுகாப்பு கருத்தரங்கில் முஸ்லிம்கள் தொடர்பாக தெரிவித்த கருத்துகள் முஸ்லிம் சமூகத்துக்குள் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஆற்றிய உரையில் முஸ்லிம்களைப் பற்றிய கருத்துகள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டு வரும் தீவிரவாதிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸின் தலைவர் என்.எம்.அமீன் கையொப்பமிட்டு பாதுகாப்பு செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,
முஸ்லிம் சமூகம் கடந்த 30 வருட கால யுத்தத்தின் போது அரசாங்கத்துக்கு ஆதரவாகவே இருந்துள்ளது. எதுவித ஆயுதப் போராட்டங்களிலும் ஈடுபடவில்லை.
முஸ்லிம்களுக்குள் ஆயுதக்குழுக்களோ தீவிரவாதிகளோ இல்லை. அவ்வாறு செயற்படவுமில்லை என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். ஏனைய நாடுகளின் தீவிரவாதிகள் இலங்கை முஸ்லிம்களுடன் இணைந்து செயற்படுவதற்கு இலங்கை முஸ்லிம் சமூகம் ஒரு போதும் அனுமதிக்காது என்பதை உங்களுக்கு உறுதியுடன் தெரிவிக்கிறோம்.
மிகவும் சிரமத்துடன் பெற்றுக் கொள்ளப்பட்ட சமாதானத்தை தொடர்ந்தும் பாதுகாத்துக் கொள்வதற்கு தங்களது தலைமைத்துவத்தின் கீழான புலனாய்வுப் பிரிவு செயற்பட்டுவருகிறது.
நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் சீர்குலைப்பதற்கு யாரேனும் தமது சமயத்தின் பெயரால் முயற்சிப்பார்களாயின் சமயத்தின் பெயரால் ஆயுத பயங்கரவாதத்தை ஆதரிப்பார்களானால் அவர்களுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிப்பதை நாங்கள் வரவேற்கின்றோம்.
முஸ்லிம் சமூகம் நாட்டின் சமாதானத்திற்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்பதை உறுதிசெய்கின்றோம் எனவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment