சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லுாரியில் கல்வி பயிலும் மாணவர்கள் பயணம் செய்த பேருந்து நடத்துனரால் தாக்கப்பட்ட நிலையில் இடைநடுவில் வீதியில் இறக்கிச்சென்ற சம்பவம் இன்று(10) செவ்வாய் கிழமை காலை 9.45 மணியளவில் கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்றது. இதனால் இங்கு பதற்றம் ஏற்பட்டது.
இது விடயமாக மேலும் தெரியவருவதாவது,
சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லுாரியில் கல்வி பயிலும் மாணவர்கள் தமது போக்குவரத்துக்கு தனியான பேருந்து வசதியினை செய்து தருமாறு கோரி இன்று காலை கல்முனை மாநகர சபை முதல்வர் அலுவலகத்திற்கு வருகை தந்து மகஜர் ஒன்றினை முதல்வர் ஸிராஸ் மீராசாஹிபின் பிரத்தியேகச் செயலாளர் எம். இன்ஸாட், கணக்காளர் எல். ரீ. சாலிதீன் ஆகியோரிடம் கையளித்தனர்.
அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லுாரிக்கு கல்முனை, சம்மாந்துறை பிரதேசத்திலிருந்து செல்லும் சுமார் 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் காலை குறிப்பிடப்பட்ட 7.30 மணிதொடக்கம் 7.45 மணிவரை பயணத்தில் புறப்படும். என்றாலும் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு (7.30மணிக்கு) முதலே புறப்பட்டுச்செல்வதனால் நாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறோம்.
அதுபோல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளிலேயே நாமும் பயணிப்பதால் எங்களை கவனியாமல் நேரம் பிந்துகின்ற மாணவர்கள் அன்றைய தினம் கல்லுாரிக்கு செல்ல முடியாமல் பல தடவைகள் ஏமாற்றப்பட்டுள்ளோம்.
எனவேதான் எனக்கு தனியான பேருந்து ஒன்றை தொழில்நுட்பக் கல்லுாரிக்காக மட்டும் பெற்றுத்தருமாறும், அதிலும் குறிப்பாக இரண்டு கதவுகள் கொண்ட பெரிய பேருந்தை பெற்றுத்தந்தால் மாத்திரமே எமக்கு அதற்கான பூரண பயன் கிடைக்கும் என்பதுடன் எமது கல்லுாரி பாடங்களை சிறப்பாக உரிய நேரத்திற்குச் சென்று பயிலக்கூடிய வாய்ப்பு ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை பெற்றுக்கொண்ட முதல்வரின் பிரத்தியேகச் செயலாளர் இன்ஸாட் உடனடியாக இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு இன்று மாணவர்கள் தொழில்நுட்பக் கல்லுாரிக்குச்செல்வதற்காக தற்காலிகமாக ஒரு பேருந்தை பெற்றுக்கொடுத்தார்.
அந்த பேருந்தில் மாணவர்கள் ஏறிச்சென்றாலும் பேருந்து நடத்துனரால் இடைநடுவில் கல்முனை பிரதான வீதியில் இறக்கிச்செல்ல முற்பட்டதால் மாணவர்கள் அணைவரும் வீதியில் நின்ற பேருந்தை வழிமறித்து கல்லுாரிக்குச்செல்ல நேரம் பிந்தியுள்ளதால் தங்களை ஏற்றிச்செல்லுமாறு மாணவர்கள் வேண்டிக்கொண்டாலும், மறுத்த பேருந்து நடத்துனர் பருவகாலச் சீட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லா மாணவர்களும் டிக்கெட் எடுக்க வேண்டும். என்று கூறியதை மாணவர்கள் மறுத்ததால் தகாத வார்த்தைப்பிரயோகங்கள் பிரயோகிக்கப்பட்ட நிலையில் மாணவர்களைதாக்கி வெளியே இறங்குமாறு பேருந்து நடத்துனர் கூறியுள்ளார்.
இதேவேளை சம்பவ இடத்திற்கு விரைந்த கல்முனை போக்குவரத்து பொலிசார் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள் இன்று பெரும் ஏமாற்றத்துடன் கல்லுாரிக்குச்செல்லாமல் கல்முனை பொலிஸ் நிலையம் சென்று அங்கு குறித்த பஸ் நடத்தனருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



No comments:
Post a Comment