Pages

Sep 2, 2013

முஸ்லீம் சமூகம் தொடர்பான முழு அறிக்கையை நவநீதம் பிள்ளையிடம் கையளித்துள்ளதாக ஹகீம் தெரிவித்தார்.

முஸ்லிம்களைப் பிரதி நிதித்துவம் பெறும் கட்சி என்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லீம் சமூகம் தொடர்பான முழு அறிக்கையை மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஸ்தானிகர் நவநீதம் பிள்ளையிடம் கையளித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவுப் ஹகீம் அவர்கள் தெரிவித்தார்.

(30.8.2013 இரவு) மடவளை சந்தியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார். கண்டி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டி யிடும் 30 அங்கத்தவர்கள் வரை இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் அவர் உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது-

நான் அமைச்சர் என்ற ரீதியில் அன்றி கட்சி என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முடிவின் பிரகாரம் அதனைக் கையளிக்க நடவடிக்கை எடுத்தேன்.

எமது மறைந் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் கோட்பாடு ஒன்றின்படி 'சரியான முடிவை பிழையான நேரத்தில் எடுத்தால் அதுவும் பிழையாகி விடும்' என்பது. எனவே நாம் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்கக் கடமைப் பட்டுள்ளோம். அதன்படி செய்துள்ளோம்.

சிலர் எம்மைப் பற்றிக் குறை கூறித் திரிகின்றனர். அவ்வாறு குறை கூறுபவர்கள் நாம் அரசை விட்டு வெளியேற வேண்டும் என்பதே அவர்களது கோறிக்கை. நான் அரசை விட்டு விலகத் தேவையில்லை. எனது அமைச்சர் பதவியைத் தாரை வார்க்கத் தேவையுமில்லை. தந்தவர்கள் தேவையாயின் அதனை பெற்றுக் கொள்ளட்டும்.

சகல அரசியல் சக்திகளையும் பெற்றுள்ள ஜனாதிபதிக்கு இவை எல்லாம் தெரியும். யாரும் தப்புக்கணக்குப் போடவேண்டாம்.

இந்த அரசு வித்தியாசமான பல்வேறு பாத்திரங்களைக் கொண்ட ஒரு நாக மேடை. அதில் பலருக்குப் பல்வேறு விதமான பாத்திரங்கள் உண்டு. மேர்வின் சில்வாவிற்கு ஒருவகையான பாத்திரம். அவரது கலியாணக் கதையையும் எமது தலைவர் சகித்துக் கொண்டுதான் இருக்கிறார். அதேபோல் விமல் வீரவன்ச ஒரு பாத்திரம். அவர் ஐ.நா.சபைக்கு எதிராக உண்ணா விரதம் இருந்த போதும் எமது தலைவர் பாலூற்றி அவர் விரதத்தை முடித்து வைத்தார். இதனால் நடப்பது ஒன்று மில்லை என்பதும் அவருக்குத் தெரியும். ஆதேபோல் எமது அஸ்வர் ஒரு பாத்திரம், றிசாட் இன்னொரு பாத்திரம், சம்பிக ரனவக்க இன்னொறு பாத்திரம். தலைம நடிகருக்கு இது எல்லாம் தெரியும். எனவே அதிலொறு நடிகனாக நானும் நடிக்கவேண்டியுள்ளது என்றார்.

வடமாகாணத்தில் தமிழ் கூட்டமைப்பு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நாம் தனியாகப் போட்டி இடவில்லை. எமது சக்தி யையும் அடுத்து தேர்தலுக்கான ஆற்றலையும் நாம் வெளிக்காட்டவும் சர்வதேசத்திற்கு ஒரு செய்தியைச் சொல்லவுமே தனியாகப் போட்டி இடுகின்றோம் என்றார்.

அமைச்சர் பௌசியை தவிர மற்ற எல்லா அமைச்சர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாசறையில் வளர்ந்து பின்னர் அதிலிருந்து வெளியேறி அதனை விமர்சிக்கின்றனர். இது பற்றி எனக்கு எது வித கவலையுமில்லை. நான் அவற்றைக் கண்டு கொள்வதே இல்லை என்றார்..

No comments:

Post a Comment