மத்திய மாகாண சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 16 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 5 இலட்சத்து 7 ஆயிரத்து 693 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர் எனத் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் சார்பாக இம் மாவட்டத்தில் மொத்தமாக 437 வேட்பாளர்கள் இந்த 16 ஆசனங்களுக்காகப் போட்டியிடுகின்றனர். அரசியல் கட்சிகள் சார்பாக 266 வேட்பாளர்களும் சுயேட்சைக் குழுக்கள் சார்பாக 171 வேட்பாளர்களும் இவ்வாறு தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, றுஹுனு மக்கள் கட்சி, ஜன செத பெரமுன, மலையக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா தொழில் கட்சி, ஐக்கிய சோஷலிஸக் கட்சி என்பன உட்பட மொத்தமாக 14 அரசியல் கட்சிகளும் 9 சுயேட்சைக் குழுக்களும் இம் மாவட்டத்தில் போட்டியிடுகின்றன.
கடந்த 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி நடைபெற்ற இம் மாகாண சபைக்கான தேர்தலில் இம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1 இலட்சத்து 46 ஆயிரத்து 418 வாக்குகளைப் பெற்று (51.77%) போனஸ் ஆசனம் உட்பட 9 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 1 இலட்சத்து 28 ஆயிரத்து 289 வாக்குகளைப் பெற்று (45.36%) 7 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன. மக்கள் விடுதலை முன்னணிக்கு 3,039 வாக்குகள் (1.07%) கிடைத்தன. ஆனால், ஆசனம் எதுவும் கிடைக்கவில்லை.
2009 ஆம் ஆண்டு அன்று இம் மாவட்டத்தில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் மொத்தமாக 4 இலட்சத்து 52 ஆயிரத்து 395 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருந்தும் 3 இலட்சத்து 9 ஆயிரத்து 666 பேர் மாத்திரமே தமது வாக்குகளை அளித்திருந்தனர். இவர்களில் 26 ஆயிரத்து 847 பேர் அளித்த வாக்குகள் செல்லுபடிற்றவை என நிராகரிக்கப்பட்டன.
கடந்த மாகாண சபைத் தேர்தலில் இருந்த வாக்காளர்களை விட இம்முறை இம் மாவட்டத்தில் 55 ஆயிரத்து 298 பேர் புதிதாக வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment