Pages

May 29, 2013

"இந்துக்கள் வாழும் ஊரில் புத்தர் எதற்கு?" மட்டக்களப்பில் எதிர்ப்புப் பேரணி! (படங்கள்)

 மட்டக்களப்பு மாவட்டத்தின் மாநகர சபையின் நுழைவாயில் வரவேற்பு வளைவுக்கு அருகில் புத்தர் சிலை அமைக்கும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அதனைக் கண்டித்தும் இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதேச மக்களினாலும், பிரமுகர்களாலும் "அத்துமீறி புத்தர் சிலை வைப்பதற்கு எதிர்ப்புப் பேரணி" எனும் தொனிப் பொருளிலான மாபெரும் எதிர்ப்புப் பேரணியொன்று இடம்பெற்றது. பிள்ளையாரடி பொதுமக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேந்திரன், பொன்.செல்வராசா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அறுவர், பிள்ளையாரடி பிரதேச பொதுமக்கள், ஊறணி ஸ்ரீபுலவிப் பிள்ளையார் கோயில் நிர்வாக சபைத் தலைவர் உள்ளிட்ட நிருவாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


இதன்போது பிரதேச மக்களின் சார்பாக பிள்ளையாரடி ஊறணி ஸ்ரீபுலவிப் பிள்ளையார் கோயில் நிர்வாக சபைத் தலைவரினால் மகஜரொன்று த.தே.கூ மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் குறித்த மகஜரின் பிரதியை மக்கள் சார்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ல்ஸிடம் த.தே.கூ பா.உறுப்பினர்கள் கையளித்தனர். இவ் எதிர்ப்புப் பேரணியில் "பௌத்தர்கள் அற்ற ஊரில் புத்தர் சிலை எதற்கு?" "இந்துக்கள் வாழும் ஊரில் புத்தர் எதற்கு?" "புத்த பகவானை ஆக்கரமிப்புச் சின்னமாக மாற்றாதே?" "மதப்பிரச்சினையை உருவாக்கும் புத்தர் சிலை வேண்டாம்?" உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு பொதுமக்கள் எதிரிப்புப் பேரணியில் ஈடுபட்டனர்.

குறித்த விடயம் தொடர்பில் த.தே.கூ மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாலும் பொதுமக்களாலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் இதனை தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு மூன்று எம்பிக்களும் கையொப்பமிட்டு கடிதம் அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.








No comments:

Post a Comment