முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணி பிரச்சினை தீர்த்து வைக்கப்படவேண்டும்:மௌலவி முபாறக்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணீரூற்று
போன்ற கிரமங்களைச் சுற்றி வாழ்ந்த முஸ்லிம்கள் அனைவரும் 90 ம் ஆண்டு தமது
சகல உடமைகளும் பறித்தெடுக்கப்பட்ட நிலையில் வெளியேற்றப்பட்டனர்.
இவ்வாறு சகல
உடமைகளும் பறிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் எந்தவொரு
கிராமத்திலிருந்தும் வெளியேற்றப்படவில்லை என்பதை சகலரும் அறிவோம். ஆவர்கள்
தமது பணம் நகைகளை எடுத்துக்கொண்டே அகதிகளாக வெளியேறினார்கள். ஆனாலும் தமிழ்
மக்களின் காணியற்ற பிரச்சினையையும் நாம் ஒதுக்கி விட முடியாது.
தமிழ் மக்களுக்கு காணிகளை வழங்கிய பின்பே
முஸ்லிம்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதாக
தெரியவில்லை. காரணம் முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் தமிழ் மக்களுக்கு
முன்பாகவே பல வருடங்களுக்கு முன அகதிகளாகி முகாம்களில் வாழ்ந்து
துன்பப்பட்டவர்கள். இந்த வகையில் முதலில் அகதிகளாக்கப்பட்டவர்கள் என்ற
வகையில் முஸ்லிம்களுக்கான காணிப்பிரச்சினை முதலில் தீர்த்து வைக்கப்பட
வேண்டும் என்பதே நியாயமானதும், மனிதாபிமானமிக்கதாகவும் இருக்கும்.
தமிழ் முஸ்லிம் ஒற்றுமை மிக அவசியமாக
உணரப்பட்டு வரும் இவ்வேளையில் இவ்வாறான சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
தமிழ் மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்ட பின்னரே முஸ்லிம்களுக்கு காணிகள்
வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தியல் ஏற்கப்படுமாயின் இனப்பிரச்சினை
தீர்வில் முஸ்லிம்களுக்கு தீர்வு வழங்கப்பட்ட பின்னரே தமிழ் மக்களுக்கான
தீர்வும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முஸ்லிம் சமூகத்தில் எழலாம்
அல்லது தமிழ் முஸ்லிம்களை பிரித்தாள நினைக்கும் பேரினவாதம் அதற்கு
தூபமிடலாம்.
எனவே முல்லைத்தீவு மாவட்ட அனைத்து மக்களின்
காணிப்பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்பதுடன் முதலில்
அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம்களின் காணியில்லா பிரச்சிசை முதலில் தீர்த்து
வைக்கப்படுவதற்காக தமிழ் மக்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் நியாயமான
முறையில் உதவ முன் வரவேண்டும் வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சி கோரிக்கை
விடுக்கிறது என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment