சிறிலங்காவின் பெளத்த பேரினவாதம்: நேற்று தமிழர்கள் – இன்று முஸ்லீம்கள் – நாளை பெளத்தரல்லாத சிங்களவர்கள்

இவ்வாறு The print edition of ‘the London Review of Books’ பதிப்பில் எழுதியுள்ள கட்டுரையில் Tariq Ali தெரிவித்துள்ளார். அதனை மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.
பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு, 26 ஆண்டுகாலமாக சிறிலங்காத் தீவில் தொடரப்பட்ட யுத்தமானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகின்ற நிலையிலும் கூட, மீண்டும் இங்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தடவை இந்த மோதலுடன் இராணுவத்தினர் நேரடியாகத் தொடர்புபடவில்லை. இதற்குப் பதிலாக ‘பொது பல சேனா’ என்கின்ற சிங்கள தேசியவாத அமைப்பைச் சேர்ந்த புத்த பிக்குகள் தற்போதைய மோதல்களுக்குப் பொறுப்பாக உள்ளனர்.
சிறிலங்காவின் மொத்த சனத்தொகையில் முக்கால்வாசிப் பேர் சிங்களவர்களாவர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களாவர். இந்தத் தடவை பௌத்த பிக்குகள் சிறுபான்மை முஸ்லீம் மக்களை இலக்கு வைத்துள்ளனர். முஸ்லீம் வணக்க இடங்கள் இலக்கு வைத்து தாக்கப்படுகின்றன.
‘Halal’ மாமிச இறைச்சிகளை விற்கும் விற்பனையாளர்கள் தாக்கப்படுகின்றனர். முஸ்லீம்களின் வீடுகள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான தாக்குதல் சம்பவங்களை சிறிலங்கா காவற்துறையினர் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறான வன்முறைகளை சிறிலங்கா தொலைக்காட்சிகள் மிக அமைதியான முறையில் பதிவாக்கியுள்ளன.
சில வாரங்களின் முன்னர், முஸ்லீம் ஒருவருக்குச் சொந்தமான மோட்டர் வாகன காட்சி அறை மீது பௌத்த பிக்குகளின் தலைமையில் காடையர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. மோட்டர் வாகன காட்சி அறையில் வேலை செய்யும் பணியாளர் ஒருவர் இளம் சிங்களப் பெண் ஒருவரை தன்னுடன் கூட்டிச் சென்றதாக இப்பெண்ணின் தகப்பனார் உள்ளுர் புத்த பிக்கு ஒருவரிடம் முறையிட்டதை அடுத்தே இத்தாக்குதல் இடம்பெற்றது. “புத்த பிக்கு ஒருவர் விகாரை ஒன்றிலிருந்து 25 வயதிற்கு குறைந்த இளைஞர்களுடன் வெளியே வந்ததாகவும் இந்தக் குழுவினர் தமது கைகளில் கற்களை வைத்திருந்ததாகவும், இவர்களிடம் மண்ணெண்ணை இருந்ததாகவும் கண்டறியப்பட்டது” என சண்டே லீடர் பத்திரிகை தகவல் அளித்துள்ளது.
“முஸ்லீம்கள் இந்த நாட்டில் ஏழாம் நூற்றாண்டிலிருந்து வாழ்கின்றனர். தற்போது தான் இவர்கள் கலால் உணவுகளை உண்ணவேண்டும் எனக் கூறுகிறார்கள். சனத்தொகை ரீதியாகப் பார்க்கில் முஸ்லீம்கள் ஐந்து சதவீதம் மட்டுமே. நாங்கள் தற்போது ‘கலால்’ உணவு முறையை அங்கீகரித்தால் அடுத்த தடவை முஸ்லீம்கள் சுன்னத்து செய்தல் – circumcision [ஆண்களின் பிறப்புறுப்பின் முன்தோலை அகற்றுதல்] என்கின்ற அவர்களது பாரம்பரியத்தை இங்கு நடைமுறைப்படுத்த முயற்சிப்பார்கள். இதனால் இவ்வாறான விடயங்களை நாம் முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் இவை மரபுகளாகப் பின்பற்றப்படும். முஸ்லீம்களும் கிறீஸ்தவர்களும் சிறிலங்காவில் எந்தவொன்றையும் கட்டுப்படுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். Hijab, burqa, niqab, purdah போன்ற இஸ்லாமிய ஆடை அணியும் முறைமைகள் சிறிலங்காவில் தடைசெய்யப்பட வேண்டும். சிறிலங்காவின் சட்டம் மற்றும் அரசியல் யாப்பு என்பன எப்போதும் சிங்கள பௌத்தர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவேண்டும். இவற்றுக்கப்பால் சிறிலங்காவானது புத்தரிடமிருந்து சிங்களவர்களுக்கு கிடைக்கப்பெற்ற வெகுமதியாகும்” என பொது பால சேனவைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.
circumcision என்கின்ற இஸ்லாமிய மரபை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என சிறிலங்காவைச் சேர்ந்த பௌத்தன் ஒருவன் கூறுவதை கற்பனை செய்வதென்பது கடினமானதாகும். 2011ல் 9.7 சதவீதமாக இருந்த முஸ்லீம் மக்களின் எண்ணிக்கை தற்போது 5 சதவீதமாக குறைவடைந்ததற்கான காரணம் இவர்கள் மீது தமிழ் மற்றும் சிங்களவர்களால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளாகும்.
முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பொத்துவில் பிரதேசத்தில், புத்த சிலைகளை அமைப்பதற்கு இராணுவத்தினர் புத்த பிக்குகளுக்கு உதவுவதுடன், காலை மற்றும் இரவுகளில் பௌத்த பாடல்களை ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிபெருக்குவதற்கும் இவர்கள் உதவுகின்றனர். முஸ்லீம் மக்களுக்குச் சொந்தமான நிலங்களை பௌத்த சிங்களவர்கள் கையகப்படுத்துகின்றனர். இதற்கு இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். சிறிலங்காத் தீவானது புத்தரிடமிருந்து தமக்கு கிடைக்கப் பெற்ற வெகுமதி என பௌத்த கடும்போக்காளர்கள் கருதுகின்றனர்.
ஆனால் இத்தீவானது சிறிலங்காவில் வாழும் தமிழ் மற்றும் சிங்களவர்களுக்கு உரியது என சான்றுகள் நிரூபிக்கின்றன. சிறிலங்கா 1948ல் சுதந்திரமடைந்ததிலிருந்து தமிழ் மக்களின் பிரச்சினைக்கு பௌத்த அடிப்படைவாதம் என்பது பிரதான காரணமாகியது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் நாட்டின் 5வது பிரதமருமான S.W.R.D. பண்டாரநாயக்க 1959ல் பௌத்த பிக்கு ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார். இவர் தமிழ் மக்களுக்கு சலுகைகளை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
இதற்குப் பிறகு, புத்த பிக்குகளின் தலையீடுகள் அரசியலில் ஏற்பட தமிழர் எதிர்ப்பு மற்றும் புறக்கணிப்புக்களும் அதிகரித்தன. இவ்வாறான அரசியல் அடக்குமுறையிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஆயுதப் போராட்டமே ஒரு வழி என தமிழ் இளைஞர்கள் தீர்மானித்தனர். வங்காளி முஸ்லீம்கள் தமது சகோதர உறவான மேற்கு பாகிஸ்தானிலிருந்து பிரிந்து பங்களாதேசத்தை உருவாக்கியது போல் தமிழ் மக்களால் தமக்கென தனிநாட்டை ஏன் உருவாக்க முடியாது?
தமிழ் மக்கள் கோரிய சுயாட்சியை வழங்காததால் சிங்களவர்கள் உள்நாட்டு யுத்தம் ஒன்றை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது. 1976ல், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாக்கப்பட்ட போது, ‘ஈழம்’ என்கின்ற தமிழ் தனிநாடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தை நடாத்துவதற்கு புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வங்கிகளில் கொள்ளையடித்தார்கள். இவர்கள் சிறிலங்கா காவற்துறை நிலையங்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொண்டனர்.
இவ்வாறு ஆரம்பமான புலிகளின் தாக்குதல்கள் பெரியளவில் வளர்ச்சி பெற்றது. இதன் விளைவாக கொழும்பிலிருந்த சிங்கள அரசியல்வாதிகள் தமிழ்ப் பெண்கள், ஆண்கள், சிறார்கள் என பெருமளவில் கொன்று குவித்தனர். இவர்களின் அனேகம் பேர் புலிகளுடன் எவ்வித தொடர்பற்று இருந்த போதும் கொல்லப்பட்டனர். சிங்களப் பேரினவாத அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தத்தை புரிந்ததுடன், பல்வேறு மீறல்களையும் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. புலிகளும் தமது சொந்த மக்கள் மீது புரிந்த குற்றங்களை மன்னித்து விடமுடியாது. தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை மேற்கொள்வதானது புலிகள் அமைப்பின் தலைவரின் பிரதான போர்த் தந்திரோபாயமாக காணப்பட்டது. ஒவ்வொரு புலி உறுப்பினரும் தமது கழுத்துகளில் ‘சயனைட்’ வில்லைகளை அணிந்திருந்தனர். இது புலிகள் ஆபத்து வரும்போது தம்மைத் தாமே அழிப்பதற்கு பயன்படுத்தப்பட்டது.
தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை தமிழ் மக்களின் சிவில் உரிமையைப் பறிப்பதற்காக பயன்படுத்துகிறது. சிறிலங்கா இராணுவத்தினர் தற்போதும் தமிழ் மக்கள் வாழிடங்களில் அதிகம் நிறுத்தப்பட்டுள்ளனர். ஊடக சுதந்திரம் என்பது தொடர்ந்தும் அச்சுறுத்தப்படுகிறது. ஜனவரியில், பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை அதிபர் மகிந்த ராஜபக்ச பதவி நீக்கினார். முன்னாள் பிரதம நீதியரசர் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தியே இவ்வாறே பதவிநீக்கப்பட்டார். ஆனால் இவர் சிறிலங்கா அதிபரின் விருப்பிற்கிணங்க சட்ட மாற்றம் கொண்டு வரவில்லை என்பதே இவர் பதவி நீக்கப்பட்டதற்கான உண்மையான காரணமாகும். மக்களின் சிவில் உரிமைகள் மீறப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தவே சிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ராஜபக்ச தற்போது நாட்டின் பாதுகாப்பு, நகர அபிவிருத்தி, நிதி மற்றும் துறைமுகம், நெடுஞ்சாலைகள் போன்ற துறை சார் அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். இவரது சகோதரர் பசில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சராவார். பிறிதொரு சகோதரரான சமல், நாடாளுமன்ற சபாநாயகராவார். இவரது பெறாமகன் சசிந்திர, ஊவா மாகாணத்தின் முதலமைச்சராவார். இவரது மைத்துனனான ஜாலிய விக்ரமசூரிய, அமெரிக்காவுக்கான தூதுவராக கடமையாற்றுகிறார். பிறிதொரு மைத்துனரான உதயன்க வீரதுங்க ரஸ்யாவுக்கான தூதுவராவார். சிறிலங்கா அதிபரின் 25 வயது மகன் நாமல், அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினராவார். இங்கு சீன உதவியுடன் பிரதான துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்த சீன பாதுகாப்பு முக்கிய அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து இடங்களை சுற்றிப் பார்வையிட்டுள்ளதுடன், விரைவில் கரையோரப் பகுதியில் மேற்கொள்ளவுள்ள சீனத் திட்டங்களுக்கான இடங்களை கண்காணித்தனர்.
சிறிலங்காவின் தற்போதைய நிலை தொடர்பாக தற்போது லண்டனில் வசித்து வரும் 80 வயதான தமிழ் நாவலாசிரியரான ஏ.சிவானந்தன், தமிழ் மக்கள் மட்டுமன்றி சிறிலங்காவில் வாழும் சிங்கள மக்களும் அச்சத்துடன் வாழும் நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
“தோற்கடிக்கப்பட்ட தமிழ் மக்கள் தற்போது ஒவ்வொன்றையும் பற்றி மீளச்சிந்திக்கின்றனர். குறைந்தது புலிகளை ஆதரித்த புலம்பெயர் தமிழ் மக்களாவது தற்போது கடந்த காலம் தொடர்பில் சிந்திக்கிறார்கள். இவர்கள் சுதந்திரம் தொடர்பாக பேசாது அரசியல் உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பாக பேசுகிறார்கள். இது காலந் தாழ்த்தப்பட்டு மேற்கொள்ளப்படுகிறதா? எனக்கு இதுபற்றித் தெரியாது. புத்த பிக்குகள் விரைவில் சுயாதீனமாக செயற்படுவார்கள். பௌத்தத்தை பின்பற்றாத சிங்களவர்களை புத்த பிக்குகள் புறக்கணிப்பார்கள். இதற்கு ராஜபக்சவும், அவரது குடும்பத்தவர்கள், நண்பர்கள் எல்லோரும் உதவுவார்கள். இதனால் நாட்டில் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் என்பது தவிர்க்க முடியாதபடி எழுச்சியுறலாம்” என நாவலாசிரியர் சிவானந்தன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment