Pages

Apr 22, 2013


பொது பல சேனாவுக்கும், அதன் அனுசரணையாளர்களுக்கும் அஸாத் சாலியின் எச்சரிக்கை

இந்த நாட்டில் அல் குவைதாவோ, ஜிஹாத் அமைப்போ அல்லது வேறு எந்த முஸ்லிம் சர்வதேச தீவிரவாத அமைப்புக்களின் குழுக்களோ அவர்களின் பிரதிநிதிகளோ அல்லது கிளைகளோ கிடையாது. தேவையற்ற பிரச்சினைகளை முஸ்லிம்கள் மீது திணித்து அவர்களின் அமைதியான, நிம்மதியான வாழ்வுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். என்று கூறினார் தேசிய ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் அஸாத் சாலி.

கொழும்பில் உள்ள தேசிய ஐக்கிய முன்னணி அலுவலகத்தில் நேற்று (21.04.13) கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களின் தேசிய ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் வைபவத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

பெருந்திரளான ஆதரவாளர்கள் இங்கு சமுகமளித்திருந்தனர் அவர்கள் மத்தியில் தொடர்ந்து பேசும் போது,

இந்த நாட்டின் தமிழர்கள் மீதான வேட்டையை முடித்துக் கொண்டதாகக் கருதும் ஒரு பிரிவினர் அந்தத் தப்புக் கணக்குடன் தற்போது முஸ்லிம்களை குறிவைக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் முஸ்லிம்களை குறிவைத்து அவர்கள் தொடங்கியிருக்கும் இந்த விளையாட்டு மிகவும் ஆபத்தானது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதன் விளைவுகள் மிக மோசமானவையாக அமையக் கூடும் என்பதை பொது பல சேனாவுக்கும் அதன் அனுசரணையாளர்களுக்கும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

முஸ்லிம் தீவிரவாதக் குழுக்கள் நாட்டில் செயற்படுவதாகவும்,முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் பரவியுள்ளதாகவும் பொது பல சேனா தொடர்ந்தும் கூறி வருகின்றது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டு உண்மையா பொய்யா என்று விசாரித்து முடிவு கூற வேண்டிய இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ஆனால் பொது பல சேனா தொடர்ந்தும் இதைக் கூறி வருவதோடு மட்டுமன்றி முஸ்லிம்களுக்கும் அவர்களின் சொத்துக்களுக்கும் தெடர்ந்தும் சேதங்களை விளைவித்தும் வருகின்றது. இது தொடர்பான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. இவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி தற்போது நாம் ஆராய்ந்து வருகின்றோம்.

தேசிய ஐக்கிய முன்னணி ஒரு அரசியல் கட்சியாக எதிர்வரும் தேர்தல்களில் களமிறங்கவுள்ளது. அதற்கான ஆயத்தங்களை நாம் தற்போது மேற்கொண்டு வருகின்றோம்.யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள தனிப்பட்ட பாதிப்புக்கள் மற்றும் அவர்களின் சொத்துக்களுக்கு எற்பட்ட இழப்புக்கள் என்பனபற்றியும் நாம் தற்போது தகவல்களைத் திரட்டி வருகின்றோம்.இது சம்பந்தமாக எமது கட்சி ஒரு குழுவை அமைத்து அதன் மூலம் மக்களுக்கு யுத்தத்தால் ஏற்பட்ட இழப்புக்கள் பற்றிய பதிவுகளை மேற்கொள்ளவுள்ளோம்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை பாதுகாப்பு படையினரின் துணையோடு கபளீகரம் செய்யும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் பரவலாக முறைப்பாடுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாகவும் எமது கட்சி ஆராயும். இந்தக் காணி கபளீகரத்துக்கு எதிராகவும் மக்கள் சார்பில் தேசிய ஐக்கிய முன்னணி சட்ட நடவடிக்கை எடுக்கும்.

மக்கள் தமக்கு ஏற்பட்ட சொத்திழப்புக்கள் பற்றி ஆதாரபூர்வமான முறையீடுகளை எம்மோடு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.அவர்கள் தமது சொத்துக்களை மீளப்பெற நீதிமன்றம் செல்லத் தேவையான சகல உதவிகளையும் ஆலோசனைகளையும் தேசிய ஐக்கிய முன்னணி வழங்கும் என்று அஸாத் சாலி கூறினார்.JAMU

No comments:

Post a Comment