மின் கட்டண உயர்வு – நிவாரணம் வழங்க அரசு ஆராய்வு
உத்தேச மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில்
அதிகரித்து வரும் மக்கள் விசனம் தொடர்பாக மக்களுக்கு நிவாரணம் வழங்குவது
தொடர்பாக அமைச்சரவை ஆராய்ந்து வருவதாக அமைச்சர் ஒருவர் நேற்று
தெரிவித்தார்.
கடந்த 18 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை
கூட்டத்தில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மின்சார கட்டணம் தொடர்பில்
மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என வாதிட்டார். எனினும் இந்த
விடயம் கடந்த 24 ஆம் திகதி அமைச்சரவை கூட்டத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
எனினும் சில அமைச்சர்கள் குறித்த கூட்டத்துக்கு வருகை தராமையினால் இந்த
விடயம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
பொருளாதார
அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தகவல் தருகையில் மின்சக்தி அமைச்சர்
பவித்ரா வன்னியாராச்சி உட்பட முக்கிய அமைச்சர்கள் இந்த விடயம் பற்றி
கலைந்துரையாட சமூகமளிக்கவில்லை என்று தெரிவித்தார். அவர் மேலும்
தெரிவிக்கையில் “இது பற்றி நாம் அடுத்த வாரம் இது பற்றி கலந்துரையாடுவோம்.
தற்போது அமுலில் உள்ள பொறிமுறையின் கீழ் மக்களுக்கு நிவாரணம் வழங்கும்
சாத்தியப்பாடுகள் பற்றி இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படும்” என்று
கூறினார்.
எதிர்க்கட்சிகள் இந்த கட்டண அதிகரிப்பு
சம்பந்தமாக பெரிய அளவில் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆயத்தம் செய்து
வருகின்றன. ஐக்கிய தேசிய கட்சி கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் இது
தொடர்பாக மெழுகுதிரி ஏந்தி போராட்டம் ஒன்றை நடத்தியது.
மக்கள் விடுதலை முன்னணி இந்த கட்டண
அதிகரிப்புக்கு எதிராக பல மக்கள் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.
அத்துடன் சில சிவில் சமூக குழுக்கள் இது தொடர்பாக பல சட்ட நடவடிக்கைகளை
சம்பந்தப்பட்டோருக்கு எதிராக எடுப்பதற்கு தீர்மானித்துள்ளன.
No comments:
Post a Comment