அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தொடர்பில் என்னை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. எனினும் தான் குறித்த ஊடகத்திற்கு எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. அவர்களே இட்டுக்கட்டி செய்திகளை வெளியிடுகின்றனர் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தின்போது அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தொடர்பிலான வினைத்திறன் குறித்த பரிசீலனை சீட்டு சமர்பிக்கப்படவுள்ளது என ஷபீக் ரஜாப்தீனை மேற்கோள்கட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டது. பின்னர் குறித்த செய்தி தொடர்பிலேயே கட்சியின் உயர்பீட கூட்டத்தில் பேசப்பட்டது.
இது தொடர்பில் ஷபீக் ரஜாப்தீனை தொடர்புகொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் அவ்வாறானதொரு தகவலை எந்த ஊடகத்துக்கும் வழங்கவில்லை. அவ்வாறு குறித்த ஆங்கில ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டதையடுத்து பல ஊடகங்களிலிருந்து என்னை தொடர்புகொண்டன. அதன்போதும் நான் ஊடகங்களுக்கு எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.
அத்தோடு செய்தி வெளியிட்ட குறித்த ஊடகத்தின் ஆசிரியரை தொடர்புகொண்டு அது தொடர்பில் நான் வினவினேன்.
இவ்வாறு ஊடகமொன்று பொய்யான செய்தியை வெளியிடுவதானது ஊடக தர்மத்துக்கு முரணான செயலாகும் என குற்றம் சுமத்தினார்.
சில கடும்போக்கு அமைப்புகள் முஸ்லிம் காங்கிரஸை அரசிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதேவேளை சில ஊடகங்களும் மு.கா. அரசிலிருந்து எப்போது வெளியேறும் என்பது தொடர்பிலேயே எம்மிடம் கேள்வி எழுப்புகின்றன எனவும் ஷபீக் ரஜாப்தீன் தெரிவித்தார்.
இதேவேளை நேற்றுமுன்தினம் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்தில் குறித்த ஊடகம் வெளியிட்ட செய்திக்கமைந்தவாறு எந்த விடயமும் பேசப்படவில்லை எனவும் தேர்தல் காலங்களில் சில ஊடகங்கள் செய்திகளை திரிபு படுத்துகின்றமையால் மு.கா தலைவர், செயலாளர் தவிர்ந்த கட்சியின் ஏனையவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை தவிர்ந்துகொள்ளுமாறு தலைமை வேண்டிக்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் செயலாளருமான ஹஸனலி தெரிவித்தார்.
.jpg)
No comments:
Post a Comment